Monday, July 13, 2009

கவிதை 4

o

அசைவற்றேதான் இருக்கிறான்
பதைப்புற்று அலைந்து திரிகிறது நிழல்

லாந்தரின் தாகம் அவிந்ததும்
அசைவற்று ஒன்றாய் போனார்கள்
அவனும், அதுவும், லாந்தரும்.

@@@@@

கவிதை 3

@ @ @

வெந்தணல் வெளி, அன்றி கடுங்குளிர் பனி
இவ் வாழ்வு
மணற்புயலின் பெருந்திரை
நட்பாய் புன்னகைகள்
இருந்திருக்கலாம் ஒரு வேளை!
ஒரு குவளை நீருக்காக
நான் கொன்றிருக்கலாம் உன்னையும்
சிரித்தபடியே

குழந்தைகளுக்கு
கொடுக்கவென தேடி அலைந்தால்
எலும்புகள்தான் கிடைத்தபடியிருக்கின்றன
எங்கும்

வந்த தடமும் கலைந்து போய்
வேண்டும் இடமும் தொலைந்து போய்
காற்றின் ஓயாத ஓலம்

தன் பறவையின் குரல் தொலைத்த காதுகளில்
ஓயாமல் விழுந்து தொலைக்கின்றன
பிணம் தின்னப் பெருமை கொள்ளும்
வல்லூறுகளின் இறகடிப்பு...

தம் தாய்மார்களைத்
தூக்கிலிட்ட கயிறுகள் கொண்டு
தூளிகட்டி தூங்க ஏங்குகிறார்கள்
எம் மக்கள்.

@@@

கவிதை 2

தீக்கு கவலையில்லை என்றும்
தன்னைத் தின்றேனும் விண்ணை எட்டும்

பாறைகளுக்கோ இருத்தல் குறித்த
பிரச்சனையில்லை ஒரு நாளும்

தண்ணீருக்குதான்
ஆவியாதலின் அலைகழிப்பு என்நாளும்.

o

கவிதை 1

  • படைப்பு


தோண்டிய பள்ளத்தில் ஈரம் காட்டி
அள்ளும் பொழுதே உறிஞ்சிக் குடித்திடும்
நதிமணல் படுகை

நான் கூசி ஒதுங்கும் யாவற்றையும்
பேதமற்றே தழுவிடும் என் நிழல்

சூன்யத்தில் ஒளிரும் ஒலியினைப் பெயர்த்திட
வண்ணமாய் வழிந்து பரவும் கீதம்

தழுவிச் செல்லும் காற்றின் விரல்களை
நிரந்தரமாய் பற்றிக் கொள்ள விழையும் கொடி.


Tuesday, October 28, 2008

கோட்டோவியம்-1


கவிதை எழுதுவது காக்காய் வலிப்பைப் போல ஒரு வியாதி, தாக்குதல் துவங்கி விட்டால், பஸ் டிக்கெட்டோ, மடிகணினியோ, கைத்தொல்லைப் :) பேசியோ ஏதோ ஒன்று வேண்டும். அதற்கு இணையான இன்னொரு வியாதியைச் சொல்ல வேண்டுமானால் வரையத்துடிக்கும் மனம். முதல் வியாதிக்கான அதே நோய்க்கூறுகளையும், அதே சிகிட்சை முறைகளையும் கொண்டது.

Tuesday, September 30, 2008

மீரா



எனக்கு மிகவும் பிடித்த குறியீடு, எம்.எஸ் பாடிய மீரா பஜன்களுடன், ஒரு அழகான சிலையையும் நான் பார்த்ததிலிருந்து, மீராவை கோட்டோவியங்களாக்கிக் கொண்டிருந்தேன்.

Raag Meera என்னும் தலைப்பில் அவற்றை காட்சிப்படுத்தினேன்.

எளிமையும், இசைவும், கொண்ட கருப்புக் கோடுகள், தூய வெண்தாளில் மிதந்து கொண்டிருக்கும், இசை அனுபவங்கள். அவை.

இந்த மீரா என்னுடைய முகவரி அட்டையில் போடவென, கடையிலிருக்கும் கணினியை கொண்டு வரைந்தது. மிகக் குறைந்த பிக்ஸெல்லில் வரைந்து பெரிதாக்கியதில் ஏற்படும் விவர இழப்புக்கு வருந்துகிறேன். கிட்டத்தட்ட இதே போன்றதொரு பிரதி துளசியக்காவிடம் இருக்கிறது.