Sunday, May 01, 2005

சில கவிதைகள்

மெல்லத் தொடரும் மணியோசை
காலத்தை உடைத்து கனியுண்டு
ஒளி மழையில் சிறகு உலர்த்தி
அன்பை அருந்திக் களிப்பாறும்
சிறு பறவை தன் கூடு விட்டு
மெல்லப் பரவும் மணியோசை
விசும்பின் வரையறை உள்ளொடுங்க
மீராவைத் தேடிய கானம் வீடடையும்.
@
அடர்வெளி
வன மலர்கள்
மலர்ச்சியின்
உச்சத்தில்
ஆனந்தக்
கவிதையென
சுகந்தத்தை பரவவிட்டு
அருவியில்
விரவி மறையும்...
தண்டுகள்
நறுக்கப்பட்டு
இருட்டறை ஜாடிகளில்
மௌனமாய்
மரித்தபடி
ஏனயன.
@
"இப்புவியில் முப்பது வருடங்கள் நடந்திருக்கிறேன், அந்த நன்றியில் ஒரு சில பரிசுகளையேனும் விட்டுச்செல்ல விரும்புகிறேன்!"-வான்கா

நானும் வலைப் பதிக்க வந்திருக்கிறேன். வான்காவைப் போலே பரிசுத்தமான பரிசளிக்க என்னிடம் ஏதேனும் உண்டா? அல்லது பள்ளி நாட்களில் எழுதாமல் விட்டுப்போன 'உன்னைக் கவர்ந்த சுற்றுலாத்தலம்', 'பாரதியாரின் பாஞ்சாலி சபதம் அல்லது பாரதிதாசனின் குடும்ப விளக்கு ஒரு சிறந்த காவியம் நிறுவுக' கட்டுரைகளையே எழுதப் போகிறேனா? தினசரிகளை டீகடையில் மேய்ந்து விட்டு எல்லாவற்றைப் பற்றியும் அபிப்பிராயம் சொல்லும் சராசரி தமிழ்குடியின் நவீன வரிவடிவம்தான் என் பதிவுகளாகப் போகிறதா? அல்லது மேலைய அறிவியலின் அத்தனை ஆராய்ச்சி நுணுக்கங்களையும் கசடற பயன்படுத்தி தமிழ் நடிகைகளின் தொப்புள்களை ஆய்வு செய்யப் போகிறேனா? மயிர் பிளக்கும் 'இஸங்களா? அல்லது மழுங்கடிக்கும் இந்தியத்துவம் பற்றிய பிலாக்கானமா? என் முகத்தை என் குரலை மற்றவர்களுக்குக் காட்ட, அங்கீகாரம் தேட எழுதப் போகிறேனா? அல்லது அந்தராத்மாவின் தேடலா?

என் வலைப்பூவை அதிகம் படிக்க வைக்க எல்லோருக்கும் பிடித்தவைகளை, எல்லோருக்கும் பிடிக்கும் விதத்தில் எழுதப்போகிறேனா? எல்லா வலைப்பூக்களுக்கும் போய் ஒப்புக்கேனும் பின்னூட்டமிட்டு, 'குல்லா திருடிய குரங்குகளை' திரும்ப குல்லாவை தர வைக்க வியாபாரி செய்த அதே தந்திரத்தை மறுபடி மறுபடி முயற்சிக்கப் போகிறேனா? அல்லது கல்லைப் போட்டு கல்லைப் போட்டு கொஞ்சமே இருக்கும் தண்ணீரை நிரைய காட்டப் போகிறேனா? அல்லது கவனத்தைக் கவர இலக்கியச் சண்டை, ஏடாகூடமான அதிர்ச்சிக் கருத்துக்கள் இப்படி ஏதேனும் கைவசமுண்டா? தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் ஏதேனும் உண்டா-இணைய எழுத்தாளர்களை குட்டி,- பத்து கட்டளைகள், ஐந்து பக்கத்திற்கு வழிகாட்டும் கீதா உபதேசம் ஏதேனும் உண்டா? வரப்புத் தகராறு, தொழில் போட்டிகள், புகழ் பங்கீடுகள், இணையத்தந்தையாகும் உத்தேசம் ஏதேனும் உண்டா?

எனக்குத் தெரியலை:)

அடிப்படையில் நான் ஒழுங்கற்றவன்! எனவே இவைகளை ஒழுங்கற்றவைகளின் சிம்பனியாக மாற்ற முடியுமா? என்று வேணுமானால் முயற்சிக்கலாம்! இப்போதைக்கு இங்கே நிறுத்திக் கொள்கிறேன்.