Sunday, May 01, 2005

"இப்புவியில் முப்பது வருடங்கள் நடந்திருக்கிறேன், அந்த நன்றியில் ஒரு சில பரிசுகளையேனும் விட்டுச்செல்ல விரும்புகிறேன்!"-வான்கா

நானும் வலைப் பதிக்க வந்திருக்கிறேன். வான்காவைப் போலே பரிசுத்தமான பரிசளிக்க என்னிடம் ஏதேனும் உண்டா? அல்லது பள்ளி நாட்களில் எழுதாமல் விட்டுப்போன 'உன்னைக் கவர்ந்த சுற்றுலாத்தலம்', 'பாரதியாரின் பாஞ்சாலி சபதம் அல்லது பாரதிதாசனின் குடும்ப விளக்கு ஒரு சிறந்த காவியம் நிறுவுக' கட்டுரைகளையே எழுதப் போகிறேனா? தினசரிகளை டீகடையில் மேய்ந்து விட்டு எல்லாவற்றைப் பற்றியும் அபிப்பிராயம் சொல்லும் சராசரி தமிழ்குடியின் நவீன வரிவடிவம்தான் என் பதிவுகளாகப் போகிறதா? அல்லது மேலைய அறிவியலின் அத்தனை ஆராய்ச்சி நுணுக்கங்களையும் கசடற பயன்படுத்தி தமிழ் நடிகைகளின் தொப்புள்களை ஆய்வு செய்யப் போகிறேனா? மயிர் பிளக்கும் 'இஸங்களா? அல்லது மழுங்கடிக்கும் இந்தியத்துவம் பற்றிய பிலாக்கானமா? என் முகத்தை என் குரலை மற்றவர்களுக்குக் காட்ட, அங்கீகாரம் தேட எழுதப் போகிறேனா? அல்லது அந்தராத்மாவின் தேடலா?

என் வலைப்பூவை அதிகம் படிக்க வைக்க எல்லோருக்கும் பிடித்தவைகளை, எல்லோருக்கும் பிடிக்கும் விதத்தில் எழுதப்போகிறேனா? எல்லா வலைப்பூக்களுக்கும் போய் ஒப்புக்கேனும் பின்னூட்டமிட்டு, 'குல்லா திருடிய குரங்குகளை' திரும்ப குல்லாவை தர வைக்க வியாபாரி செய்த அதே தந்திரத்தை மறுபடி மறுபடி முயற்சிக்கப் போகிறேனா? அல்லது கல்லைப் போட்டு கல்லைப் போட்டு கொஞ்சமே இருக்கும் தண்ணீரை நிரைய காட்டப் போகிறேனா? அல்லது கவனத்தைக் கவர இலக்கியச் சண்டை, ஏடாகூடமான அதிர்ச்சிக் கருத்துக்கள் இப்படி ஏதேனும் கைவசமுண்டா? தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் ஏதேனும் உண்டா-இணைய எழுத்தாளர்களை குட்டி,- பத்து கட்டளைகள், ஐந்து பக்கத்திற்கு வழிகாட்டும் கீதா உபதேசம் ஏதேனும் உண்டா? வரப்புத் தகராறு, தொழில் போட்டிகள், புகழ் பங்கீடுகள், இணையத்தந்தையாகும் உத்தேசம் ஏதேனும் உண்டா?

எனக்குத் தெரியலை:)

அடிப்படையில் நான் ஒழுங்கற்றவன்! எனவே இவைகளை ஒழுங்கற்றவைகளின் சிம்பனியாக மாற்ற முடியுமா? என்று வேணுமானால் முயற்சிக்கலாம்! இப்போதைக்கு இங்கே நிறுத்திக் கொள்கிறேன்.

10 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாங்க வாங்க!

வாரமொரு பதிவை எதிர்பார்க்கிறேன் ரமேஷ். [இப்படியான முரட்டு வாசகர்களும் இருக்கிறார்கள் உங்களுக்கு. ;) ]

உங்கள் ஓவியங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். கூடவே வீட்டில இருக்கிற 'பெரியவங்களோடதையும்'

இங்கனம்,
குல்லா வியாபாரி.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

வாங்க மானஸாஜென்! ஆனா எதுக்கு இப்படி ரத்தக் கலர்லே எழுதறீங்க. வேறு நிறத்துக்கு மாத்திட்டீங்கன்னா கண்ணுக்கும் கொஞ்சம் இதமா இருக்கும்.

மானஸாஜென் said...

அன்பு மதி

வாங்க! நல்லாயிருக்கீங்களா?
ஊக்குவிப்புக்கு நன்றி! முயற்சிக்கிறேன்!

(உங்களை குல்லா வியாபாரியா சொல்லிக்கிட்டதன் மூலமா
நான் யாருன்றதை தெளிவா சொல்லியிருக்கீங்க...உங்க
அமெரிக்காவில பேன் பார்க்க ஆள் தேவையா?)

தேங்ஸ் செல்வராஜ்! மாத்திட்டேன் சரியான்னு பாருங்க!

-மானஸாஜென்.

Thangamani said...

"இப்புவியில் முப்பது வருடங்கள் நடந்திருக்கிறேன், அந்த நன்றியில் ஒரு சில பரிசுகளையேனும் விட்டுச்செல்ல விரும்புகிறேன்!"-வான்கா

வான்காவின் இந்த வரிகளை மேற்கொள் காட்டியதற்கு நன்றி!

எம்.கே.குமார் said...

வாங்க வாங்க!
வணக்கம் ரமேஷ்!

கூவத்தில் நிலவு ஜொலிக்க வாழ்த்துகள்.

எழுத்து ரொம்ப பொடிசாக இருப்பது போல இருக்கிறது, பெருசாக்கலாமே?!

முப்பது வருட மேற்கோள் மிக அருமை! தொடருங்கள்!!

குல்லா 'ரிட்டைல் ஷாப்' ஓனர்,

எம்.கே.

Vijayakumar said...

ஆகா ரமேஷ், எப்போ வந்தீங்க. நான் கவனிக்கவே இல்லை. வாங்க வாங்க வலைப்பதிவு உலகத்துக்கு. உங்களுக்கு பிடிச்ச 'வான்கா'வோட ஆரம்பிச்சிருக்கீங்க. ஜமாய்ங்க. வாழ்த்துக்கள். அப்பப்போ உங்க ஓவியங்களையும் ஃபோட்டோ பிடிச்சி போடுங்களேன்.

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்பின் ரமேஷ்,
இப்பதான் பார்த்தேன். அழகா அமரிக்கையா ஆரம்பிச்சிருக்கீங்க. உங்களின் கவிதைகளுக்கும் ஓவியங்களுக்கும் என்னில் ஒரு ரசிகை உண்டு என்றறிவீர்களா ? வாழ்த்துக்கள். இனி தினமும் ஒரு விஸிட் உண்டு, இங்க.
மிக்க அன்புடன், ஜெ

பாலு மணிமாறன் said...

இணையத்தை வளப்படுத்தும் இன்னொரு பதிவு. வாங்க ரமேஷ்...உங்களால் நல்லா மட்டுமே எழுத முடியும், எனவே, உங்களுக்கு குல்லா வியாபாரம் தேவையில்லை! :)))

அன்பு said...

வணக்கங்க ரமேஷ்.
உங்கள் புதிய வலைப்பதிவுக்கு வாழ்த்துக்கள்.

அன்று நம்முடைய முதல் சந்திப்பின் உங்களுடைய பேச்சிலிருந்து இன்னும் மீளவில்லை. நிறைய விடயம் உங்களிடம் தெரிந்துகொள்ள இருக்கிறது. அதற்கு இந்த வலைப்பதிவு வழிவகுக்கும்.

நீங்கள் வலைப்பதிவுக்குப் புதிது என்று என்னைப்போல் தவறாய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக உங்களின் முதல்பதிவே - வலைப்பதிவுகளைப் பற்றிய ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையாகவே படைத்து அசத்தி இருக்கின்றீர்கள், மிக்க நன்றி.

தொடர்ந்து ஆச்சரியப்படுத்துங்கள்.

மீண்டும் நன்றி.

மானஸாஜென் said...

நன்றி ! ஜவஹர், அன்பு, குமார், ஜெயந்தி, பாலு மற்றும் தங்கமணி அண்ணாச்சி.(தானே?) உங்க வலைப்பதிவுக்கான இணைப்பை எப்படி இணைப்பதென சொல்லிப்போடுங்கோ!

இப்போதிருக்கும் அழகான இணைப்புகளுக்காக குமாருக்கு என் கூடுதல் நன்றி!