Monday, May 16, 2005தீபம் பத்திரிக்கையில் நா. பா எழுத்தாளர்களிடம் "நானும் என் எழுத்தும என்ற தலைப்பில் கட்டுரைகள் கேட்டு வாங்கிப் போட்டு பிரசுரம் செய்தார், எழுத்தாளர்கள் ஏன் எழுதுகிறார்கள், அவர்களின் அக, புற நோக்கங்கள் என்ன போன்ற அரிய தகவல்கள் கொண்ட கட்டுரைகளாக அவை மலர்ந்தன. ஜாம்பவான்கள் பலர் எழுதிய அக் கட்டுரைகளை 'தீபம் கட்டுரைகள்' என்ற பெயரில் பல ண்டுகளுக்கு முன்னர் கலைஞன் பதிப்பகம் தொகுத்து உள்ளது.

நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ரா.சு நல்லபெருமாள், தவன், வல்லிக்கண்ணன், இந்திரா பார்த்தசாரதி, எம்.டி. வாசுதேவன் நாயர் உட்பட பலர் எழுதியுள்ளனர். வளரும் எழுத்தாளர்களும்,உளரும் எழுத்தாளர்களும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்!

நகுலனின் இக்கட்டுரை முதலில் படித்தபோது என்னைக் கவரவில்லை, சுந்தர ராமசாமியின் கட்டுரை அப்போது ரொம்பப் பிடித்திருந்தது, இப்போது நகுலனின் கட்டுரை யோசிக்கத் தூண்டுகிறது. உள்ளுணர்வு சார்ந்த எழுத்துக்களை அறிவுஜீவிக்கதைகளுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு யோசிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. உலகத்தில் அறிவு ஏற்படுத்திய குழப்பத்திற்கும், வன்முறைக்கும், போர்களுக்கும் வேறு ஒரு மாற்று அவசியம்.

இக் கட்டுரையில் நகுலன் கருத்துக்கள் எல்லாவற்றிற்கும் நான் உடன்படுகிறேன் என நினைத்து விடக்கூடாது. உதாரணத்திற்கு பிரசவவலி , சிரித்து சிரித்து வயிறு புண்ணாய்ப் போயிற்று. நானும் 'சிருஷ்டியின் பிரசவ வலியில் போய் படுக்கையில் படுத்துக் கொண்டேன்! பாய்ஸ் பட ஜனகன மெட்டில் நான் பிரசவித்தது பின் வரும் பாட்டுதான்

"ஜனகனமன ஜமக்காளம் விரி...படுத்துப் புரளு கபகபகப கும்பிக்குக் கொட்டு கடமுட கட...கக்"..சரி பொகட்டும் விடுங்கள் நகுலனும் அருள் குமரனும் பிரசவிப்பதைக் கவனித்துக் கொள்ளட்டும்.

மற்றொரு உதாரணம்: ராஜா ராவ் சொன்னதை நகுலன் மேற் கோள் காட்டி விட்டு மறுபடியும் பழைய குருடி என வாலரி சொன்னார் அது இது எனப் பேசப் போய்விடுகிறார், அப்படியானால் ராஜாராவிடமிருந்து இவர் என்ன கற்றுக் கொண்டார்?

கலைஞன் பதிப்பிற்கு நன்றியுடன் இக் கட்டுரையை இடுகிறேன், வாசித்துப் பாருங்கள்.


வேளை வந்துற்ற போதுநகுலன்

இந்தக் கட்டுரை ஒரு சுய நிர்ணயமாக, சுய பரிசோதனையாக முடிந்து விடக் கூடும் என்று இந்த முதல் வாக்கியத்திலேயே எனக்குத் தோன்றுகிறது. முதலாவதாக 'ஏன் எழுதுகிறேன்?' என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அதற்குரிய பதில் என்னால் எழுதாமல் இருக்க முடியாமல் இருப்பதால், எழுதுகிறேன்' என்று பதில் அளித்து விட்டு நகர்ந்து விடுகிறேன். காரியம்தான் காரணம், னால், இந்த மாதிரிக் கட்டுரைகளில் இரண்டாம் பக்ஷமான காரணத்தை முதலில் கூறுவது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி, இப்படி இதைப் பார்க்கையில், நண்பர் சுந்தரராமசாமி வேறொரு சந்தர்ப்பத்தில் வேறொரு விஷயத்தைப் பற்றிக் கூறிய மாதிரி, இக்காரணம் அவரவர் மனவார்ப்பைக் காட்டுகிறது. என்னைப் பற்றியவரை, சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார் என்பது தெரியாது என்பதனால், என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எது என்று கண்டுபிடிக்க, எழுத்தை நாடுகிறேன்; ஏனென்றால் அது என் வழி. னால் என்னை நான் தெரிந்து கொள்ள ஏதாவது ஒரு பிரதிபலிப்புதான் பயன்படுகிறது; அந்தப் பிரதிபலிப்பு, பிரதிபலிப்பு என்பதினாலேயே, என் நிதர்சனக் காட்சியைத் தருவதில்லை; னால் எழுத்தில் இந்த ஐயமும் நிழலாடுவதால்தான் மற்ற பிரதிபலிப்புகளை விட இந்தப் பிரதிபலிப்பு ஓரளவு எனக்கு ஒரு நிதானத்தை அளிக்கிறது.

இது அடுத்த கேள்வி, என் அனுபவத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்ல முயற்சிக்கிறேன். கொஞ்ச வருஷங்களாக எங்கும் இடங் கிடைக்காத எழுத்தாளனாக இருந்த நிலை மாறி, புகுந்த இடமும் சில காரணங்களால் புளித்து விட்ட நிலை வந்ததும், ஏன் எழுதுகிறேன் என்பதைத் தெரிவித்திருந்த நான், இப்பொழுது எப்படி எழுதுகிறேன் என்பதையும் அறிந்து கொண்டிருக்கிறேன். என் நண்பர் உளநூலில் ஈடுபாடு மிக்க டாக்டர் மோகன் மேத்யூ கூறியபடி, ஒவ்வொரு சிருஷ்டிக் கலைஞனும் ஒரு பிரசவ வேதனையை அனுபவிக்கிறான்; முக்கியமாக ண் வர்க்கத்தைச் சேர்ந்தவனுக்கு இது பெண் வர்க்கத்துடன் கூறும் ஒரு அறைகூவலாகவே அமைந்துவிடுகிறது! பெண் வர்க்கத்தில் இருப்பவர்கள் சிருஷ்டிக் கலையில் ஈடுபடுவது அவர்களுக்கு இயற்கையாக வரும் சிருஷ்டி அனுபவம் அதிருப்தி தருவதாக இருக்கலாம் என்று கூறும் வாக்கு எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. னால் ஒன்று; குறிப்பிட்ட கட்டங்களில் என் உள்ளத்தில் ஒரு கட்டுக்கடங்காத பரபரப்பு ஏற்படுகிறது. சமயம் எப்படியும் இருக்கலாம். அதிகாலை, நடுநிசி, பகல்வேளை, மாலை. இந்தப் பரபரப்பைக் கழித்துத் தீர்க்க நான் எழுத ரம்பிக்கிறேன். எழுதுகையில் சிறுகதை, சிறு கவிதையாக இருந்தால் ஒரே இருப்பில் இருந்து எழுதி விடுவது என் வழக்கம். இந்தக் கட்டங்களில்கூட சிருஷ்டி வேதனையின் அதிதீவிரத் துடிப்பைத் தீர்க்க நடுநடுவே கட்டிலில் சென்று நான் படுத்துக் கொள்வதும் உண்டு! பல சிரியர்கள் கூறியபடி, இந்த முதல் கட்டத்தில் என்னால் என் படைப்பை விமர்சகனாக மாறி நின்று பார்க்க முடிவதில்லை. நான் செய்ததைச் சீர்திருத்தச் சில சமயங்களில் ஒரு கால இடையீடு வேண்டியிருக்கிறது. ங்கிலக் கவிஞன் கூறிய சிருஷ்டி விஷயத்தில் அனுபவத்திற்கும் அதைக் கலையாக மாற்றும் கட்டத்திற்கும் ஏற்படும் கால இடையீடு இயற்கையாக அமைவது; இது செயற்கையாக நான் அமைத்துக் கொள்வது. அடுத்தபடியாகக் கதைக்கு கரு எவ்வாறு அமைகிறது என்ற கேள்வி. ராமசாமி எழுதிய மாதிரி அனுபவம் வெறும் கண்ணாடிச் சில்; எழுதுபவனின் திறமைதான் அதற்கு ரஸப் பூச்சுப் பாய்ச்சுகிறது. நான் எழுதத் தேர்ந்தெடுக்கும் அனுபவமும் என் மன வார்ப்பைக் காட்டுகிறது. இந்த அனுபவத் துணுக்கு அடி மனதிலிருந்து சிருஷ்டிப் பரபரப்பில் வெடித்துக் கொண்டு வருகிறது. இதற்கு ஒரு பூரணத்துவத்தைக் கொடுப்பது எழுதுபவனின் படிப்பு, மனோ விலாசம், அனுபவம் மேலும் பலவற்றினால் உருவாக்கப்பட்ட அடி மனதின் செழிப்புத்தான். இங்கு ஒரு உதாரணம் கொடுக்கலாமே என்று தோன்றுகிறது. நான் ஒரு நண்பருடன் வெகு நாட்களாகப் பழகி வந்தேன். ஒரு நாள் முதல் முறையாக அவர் வீட்டுக்குப் போனபோது அது பிரம்மாண்டமான ஒரு கட்டிடமாக இருந்தும், அதில் மூவர் மாத்திரம் குடியிருந்தது, எனக்கு அதில் ஒரு வெறுமை உணர்ச்சி வியாபித்திருந்தாக ஒரு பிரம்மை; என்னவோ அப்போது 'காகப்கா'வின் இலக்கியம் ஞாபகம் வந்தது. அடுத்த தடவை அந்த நண்பர் என்னை மாடியில் சந்திக்காமல் கீழே உட்கார வைத்துப் பேசியதும், ஒரு பெண் மாடி ஏறிச் சென்றதும் என் மனத்தைக் கவ்விப் பிடித்தது. அதிலிருந்து உருவானது 'சாதனை' என்ற கதை. சிருஷ்டி வெறியில் எழுதுகையில் மனத்தை ஒரு நிலையில் நாட்டி, வெளியிலிருந்து வரும் தாக்குதல்களை ஒரு வகையில் புறந்தள்ள லாகிரிப் பொருள்கள் உதவுகின்றன. எழுதிய பிறகு நாம் எழுதியதற்கு இரண்டாவது அபிப்பிராயம் வேண்டுமா என்றால், அனுபவம் வாய்ந்த கலைஞனுக்கு அவன் அபிப்பிராயம்தான் முக்கியம் என்பது என் கட்சி. னால், நமது சூழ்நிலையில் கலைஞனும் மனிதன் என்ற பலவீனத்தால் இந் நிலையைக் காக்க ஓரளவு கஷ்டப்படுகிறான்.

நான் தமிழ் நாட்டில் முதல் வரிசையில் நிற்கும் சில சிரியர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பை அடைந்திருக்கிறேன். இவர்களில் பலரும் இலக்கிய விஷயமாக அதிகமாகப் பேச முன் வராதது எனக்கு ஓரளவு ச்சரியத்தை அளித்தது. என்றாலும், நான் சந்தித்த சிலரிடமிருந்து இலக்கிய விஷயமாக நான் சில்லறை சில்லறையாகக்( இது அவர்களுக்குத் தெரியுமோ என்பது எனக்குத் தெரியாது) கடன் வாங்கியிருக்கிறேன். ஸ்ரீ க.நா.சு., சி.சு.செ., 'மௌனி', சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி இவர்களைத் தவிர ஸ்ரீ ராஜாராவ் அவர்களையும் குறிப்பிடலாம். க.நா.சு. விடமிருந்து தெரிந்து கொண்ட நமது ஐதீகத்திற்கும், பண்பாட்டிற்கும், இலக்கியத்துக்கும் தத்துவார்த்தமாக இருக்கும் உறவைப் பற்றி இன்னமும் சர்ச்சை செய்து கொண்டிருக்கிறேன். அவர் வற்புறுத்தும் கனமான உலக இலக்கியப் படைப்புகளுடன் வேண்டிய உறவின் அவசியத்தைப் பற்றியும் நினைத்ததுண்டு; சி. சு. செ. கலைஞனுக்குள்ள மூர்த்தண்யத்தைப் பற்றிச் சில விஷயங்களை அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்திருக்கிறார். சுந்தர ராமசாமி தனது சுய நிர்ணயத்தால் பல இலக்கிய தரமான விஷயங்களைச் சர்ச்சை செய்யும் ற்றலைக்கண்டு நான் பலமுறை வியந்ததுண்டு. நம்பி, 'நான் எதை எப்படி எழுதினாலும் எழுதுவதனைத்தும் என் மூலம் வந்து நானாகத்தானே விரிகிறது.' என்று சொன்னது இதை எழுதுகையில் ஞாபகம் வருகிறது. 'மௌனி' ஒரு குறிப்பிட்ட தத்துவ அடிப்படையில் அனுபவம் முழுவதையும் கூர்மையாகவும் நுணுக்கமாகவும் சர்ச்சை செய்வதைக் கண்டிருக்கிறேன். இவரும் க. நா. சு. போல் ஐரோப்பிய சிருஷ்டிக் கலைஞர்களின் சற்றுக் கனமான நூல்களுடன் நல்ல பரிச்சியம் உடையவர் என்று தோன்றியது. 'அவர் சொல்வதோ, நான் சொல்வதோ முக்கியமன்று. நீ உன் வழி செல்' என்று, ராஜா ராவ் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார்.

பாதிப்புகளைப் பற்றியவரை நான் ங்கில மொழிபெயர்ப்பில் டால்ஸ்டாய், டாஸ்டாவெஸ்கி, இப்ஸென், பிராண்டெல்லோ, ப்ரூஸ்ட் என்பவர்களையும் ங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், ஹென்றி ஜேம்ஸ், ஜாய்ஸ், எலியட், டன், பெக்கட் முதலியவர்களைப் படித்திருக்கிறேன். அமெரிக்க சிரியர்களில் பாக்னரையும், கவிகளில் மரியம் மூர், வாலஸ் ஸ்டீவன்ஸ் என்னைக் கவர்ந்திருகிறார்கள். ப்ராய்டிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. இந்தப் பெயர்கள் உடனடியாக ஞாபகம் வருபவை. நவீன இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவன் தலால் நிறையப் படிப்பதுண்டு. னால், இவர்களின் சாயல் என் எழுத்தில் வரக் கூடாது என்றும் எனக்குண்டு. நமது இலக்கியத்தில் பாரதம் (இன்னமும் முழுதும் படிக்கவில்லை படிக்க வேண்டும்) கைவல்ய நவநீதம், திருமந்திரம், உபநிஷத்துகள், கீதை இவை என் மனதைத் தொட்டிருக்கின்றன. என்னைப் பற்றியவரை, வார்த்தைகளின் அழுத்தத்திலும், நுணுக்கத்திலும் கிரியா சக்தியாக இயங்குவதிலும் தமிழ் கவிதையின் உச்ச கட்டம் குறளில்தான் அடைந்திருகிறது என்று தோன்றுகிறது. எனக்கு கம்பன்கூட இரண்டாம் பக்ஷம்தான். நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கியமாகக் குறிப்பிடக் கூடியவர்கள் 'மௌனி', 'புதுமைப்பித்தன்', க. நா. சு. கியவர்கள்தான். இதைத் தவிர எனக்கு மலையாள இலக்கியத்திலும் சிறிது பழக்கம் உண்டு. எனக்கு இலக்கியத்தில் ஒரு நிதான நிலையின் அவசியத்தை உணர்த்தியவர் மதிப்பிற்குரிய நண்பர் ஸ்ரீ கே. அய்யப்பப் பணிக்கர் என்பதையும் குறிப்பிட வேண்டும். முடிவாக என் எழுத்துக்கெல்லாம் முக்கிய பாதிப்பாக சுசீலாவைக் காண்கிறேன்.

சுமார் 10 வருஷங்களில் 3 நாவல், 20 கவிதைகள், ஏறக்குறைய 20 கதைகள் எழுதியிருக்கிறேன். கவிதையைப் பற்றி ஓரிருவர் 'ஓ, இன்னாரா, மாம்; கவிதை எழுதுகிறார்' என்று சொல்லி நிறுத்திக் கொள்வதைக் கண்டேன். மற்றபடிக் கதைகளைப் பற்றியோ பிரசுரமான ஒரு நாவலைப் பற்றியோ வாசக வட்டாரங்களில்-விஷயமறிந்த-அறியாத இருவகை வர்க்கங்களிலும் ஒருவித சலனமும் ஏற்படவில்லை என்பதையும் கண்டேன். இந்தக் கட்டத்தில் ங்கில சிரியை 'விர்ஜீனியா உல்ப்' ஐ பற்றிக் குறிப்பிட வேண்டியிருகிறது. அவள் தனது 'தற்கால நாவல் இலக்கியம்' என்ற பிரசித்தமான கட்டுரையில் ஒவ்வொரு இலக்கிய சிரியனும் மொழிக்கு பிடிகொடுக்காத வாழ்வின் புதிரை தெளிவு படுத்தத்தான் எழுதுகிறான் என்றும், சம்பவங்களைக் கோவைபடுத்துவதிலும், பாத்திரங்களை உத்திபூர்வமாக வனைவதிலும் இவ்வுண்மை பொய்ப்பிக்கப்படுகிறது என்றும், இலக்கியத்தில் கதாம்சத்தின் கலப்பில்லாமல், இந்த உண்மையைச் சித்தரிப்பதில்தான் அவன் நாட்டம் என்று எழுதியிருக்கிறாள்.

எடுத்துக்காட்டாக ருஷ்ய சிரியர்களைக் காண்பிக்கிறாள். ஈ. எம். பாஸ்டர் கூடத் துரதிர்ஷ்டவசமாக கதையில் கதாம்சம் வேண்டியிருக்கிறதே என்று கூறுகிறார். ஜாய்ஸ், பாக்னர், ஜேம்ஸ் இவர்களின் கதைகளில் கதாம்சம் எப்படி அமைந்திருக்கிறது? பெக்கட்டை எந்த சராசரித் தமிழ் வாசகன் அறிந்து அனுபவிக்க முடியும்? இவ்வளவு தூரம் ஏன் எசுதுகிறேன் என்றால் கதையில் கதாம்சம் அவ்வளவு முக்கியமில்லை என்பதற்கே!

எனது 20 கதைகளில் குறைந்தது 10 எனக்கு ஓரளவு சுமாராகப் படுகின்றன. அவற்றில் ஒன்று 'சுதேசமித்ரன்' வாரப்பதிப்பிலும், மற்றவை 'சரஸ்வதி', 'இலக்கியவட்டம்', 'எழுத்து' இவற்றிலும் வெளிவந்தவை. இவைகளைப் பற்றி ஒருமுகமான அபிப்பிராயம், தெளிவில்லை, ஓட்டமில்லை, சிறுகதையில்லை, கதையின் கருவேயன்றி கதையல்ல என்பவையே. என்னால் ஸ்தூல உருவைப் பளிச்சென்று படம் பிடிக்க முடிவதில்லை. மேலும் உருவம் வேண்டும் என்றாலும் இப்படித்தான் உருவம் அமைய வேண்டும் என்ற நிர்பந்தத்தை நான் ஒத்துக் கொள்வதில்லை. மிகைப்படுத்தி எழுதுவதைவிட, சூசகமாக எழுதுவதில்தான் எனக்கு நம்பிக்கை. மேலும் பத்திரிக்கை கதைகளை என்னால் படிக்க முடிவதில்லை. ஏனென்றால் கலைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு அவசியம்; னால் கலை அப்பட்டமான வாழ்க்கைப் படமும் இல்லை. னால் பத்திரிக்கைக் கதைகள் செல்லரித்துப் போன நீதிகளை, ரீதிகளை இன்னமும் ட்சி செலுத்துவதாகப் 'பொய்' யாக ஏற்றுக் கொண்டு நடைபெறுவதால், நடைமுறைக்கு நேர் விரோதமாக இவைகள் காணப்படுகின்றன. காலத்தில் கட்டுண்டுதான்-காலத்தை மீறி ஒரு இலக்கிய சிருஷ்டி நிற்கிறது. னால், இவ்வளவும் சொல்வதால் என் கதைகள் முற்றும் வெற்றி பெற்றவையாகவும் நான் கருதவில்லை. என்னை யார் என்று தெரிந்து கொள்ளும் ஒரு முயற்சியில், என் அனுபவ உலகை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியாகவே நான் கதைகளைக் கருதுகிறேன். என் கதைகள் ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் வரவில்லை. பிறகு இலக்கியப் பத்திரிகைகளிலும் வெளியிடுவது சாத்தியமாகிவிட்டது. பிறகு அண்மையில் ஒரு நாள் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கையில் 'அழகி' முன்னுரையில் க. நா. சு புஸ்தகத்தில், புஸ்தகமாக வரவென்றே சில கதைகளை எழுதியதாக எழுதியது ஞாபகம் வரவே, பத்திரிகைகளைப் படையெடுப்பதைவிட, இலக்கியப் பத்திரிகையாசிரிகளின் தத்துப் பிள்ளைகளில் ஒருவனாகவோ, சிஷ்ய கணங்களில் ஒருவனாகவொ சேர்வதைவிட, சில நல்ல சிறு கதாசிரியர்கள் சொன்ன மாதிரி என் கதைகளை அவர்கள் எழுதுவதையோ (இந்தக் கதையை நான் எழுதுவதென்றால் இன்னமும் நன்றாக எழுதியிருபேன்) நான் விரும்புவதில்லையாதலால், ஒரு நோட் புக்கில் என் கலை ஈடுபாட்டை, எனக்குள்ள கலைத் திறனை சோதனை செய்ய, வேறு யாருக்குமின்றி, எனக்காகவே ஒரு சில சிறுகதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது அவசியமா என்று கேட்டால், இன்று தமிழ் இலக்கிய உலகம் இருக்கும் நிலையில் இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. இவைகளைத் திரட்டிப் பார்க்கையில் எழுத்தாளன் கற்பனை எவ்வாறு ஒரு குப்பை கூடை என்பதும், இந்தக் குப்பைக் கூளத்தில்தான் எவ்வாறு ஒன்றிரண்டு தானியங்கள் மிஞ்சுகின்றன என்பதையும் சொல்லவேண்டும். இதுகாறும் எழுதிய கதைகளில் 'சாதனை', 'ஒரு பெண்', 'ஜிம்மி', '?', 'ஒரு கதை', 'அசவத்தமென்னும் ஒரு மரம்', 'யாத்திரை', 'ஈசுவரய்யரும் சங்கரராமின் காரியதரிசியும்', 'அகம்', என்பவைதான் சற்று மனதிற்கு ஒரு தெம்பைத் தருகின்றன. இவற்றில் பலவும் பத்திரிகைகளில் வராதவை; புஸ்தகமாகவும் வர வாய்ப்பில்லாதவை! எனவே என்னைப் போன்ற எழுத்தாளருக்கு நான் கூறக்கூடியது பத்திரிகைகளையோ, இலக்கியக் குழுக்களையோ சாராமல் தன் நிர்ப்பந்தத்தினால் தனக்காகவே அவன் எழுதிக் கொள்ளப் பழக வேண்டும் என்பதே. இப்படி எழுதுவதால் அவன் கலையில் தெம்பும் வலிவும் காணும்; அதிக பக்ஷமாக நல்ல கதைகளும் பிறக்கும். பிறகு பிரசுரம் இருக்கவே இருக்கிறது. னால், இது முடியுமா? அவ்வளவு எளிதன்று என்பதுதான் உண்மையான பதில்!

எனது பிரசுரமான 'நிழல்கள்' ஒரு குறுநாவல். பக்கங்கள் குறைந்திருப்பதால் குறுநாவல் என்றுதானே கூற வேண்டும். இந்த நாவலும் என் கொள்கைப்படி என்னை அறிவதற்கு, என் உலகைப் பரிசீலனை செய்யும் ஒரு முயற்சி. இதைப் பற்றி நான் அபிப்பிராயம் கேட்காமலே ஒரு இலக்கிய மேதை "இதில் பாத்திர சிருஷ்டி மோசம்; நீ தத்துவம் பேசுவதாக நினைத்துக் கொண்டு என்னவோ எழுதியிருக்கிறாய்" என்றார். இன்னொருவர் " வழுக்கிக் கொண்டு போகிறது." என்றார். ஒரு ங்கிலப் பேராசிரியர் "வாழ்க்கையின் கசப்பான பிரத்தியட்சம் தெரிகிறது; என்றாலும் கலாபூர்வமாக இல்லை. நீ என்னதான் எழுதினாலும் ஜனரஞ்சகமான சிரியனாக முடியாது. உன் சை என்னவானாலும் ஜேன் ஸ்டினை மாடலாக வைத்துக் கொண்டு எழுது" என்றார். இதற்கெல்லாம் என் கவிதை ஒன்றில் எழுதியபடி "பேசினார்கள்; பேசாமல் கேட்டேன்" என்றுதான் சொல்ல வேண்டும். னால், நான் மதிக்கும் ஒரு சிருஷ்டி கர்த்தா "இந்த நாவல் நன்றாக இருக்கிறது; அடுத்த நாவலை எழுதுங்கள்" என்றார். இதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவன் மாதிரி அடுத்த நாவலை எழுதி முடித்தேன். நான், தற்காலத்தில் நாவல் புற உலகைப் புறக்கணித்து அக உலகை அறிவதில்தான் ஈடுபட்டிருக்கிறது என நினைக்கிறேன். னால் அதே சமயத்தில் நாவல் தனி மனிதனை சமூக உறுப்பினனாகச் சித்தரிக்கவும் கட்டுப்பாடுடையது. இந்த அக-புற உலக இணைப்பு சரியாக அமைந்திருப்பதால்தான் நான் க. நா. சு. வை தமிழிலேயே சிறந்த நாவலாசிரியர் என நினைக்கிறேன். மற்றபடி என் 'நிழல்களை'ப் பற்றி எனக்கு நேரில் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. 'நிழல்கள்' புஸ்தகமாக வந்துவிட்டது என்பதும், அதைப் பற்றிக் குறிப்பிட்ட இவ்விமர்சனங்கள் இன்னாரால் இவ்வாறு வந்தன என்பதும் என்னைப் பற்றியவரை மிக உபயோகமான விஷயங்கள். மற்றபடி, நாவலுக்கு இன்னொரு நோட் புக்!
கவிதைதான் இலக்கியத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பொழுது கவிதையில் படிமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பறைசாற்றுகிறார்கள். னால், படிமம் கூட மனநிலையின் சூக்கும உருவாக, சிந்தாகதியின் பிரதிரூப பிம்பமாகச் செயல்படுவதில்தான் சிறக்கிறது. கவிதையில் இசையின் தொடர்பு வேண்டுமென்றாலும் அது மிகைப்படுவதால் மலினமடைகிறது. அதனால்தான் பழங்கவிதையைப் பின்பற்றுவதாகக் கற்பனை செறிவு இல்லாத யாப்புக் கவிதைகள் ஓசைக் குப்பைகளாக இருக்கின்றன. என் போன்ற சிலரின் அனுபவம் யாப்புக் கவிதையில் காணப்படும் ஓசை அமைதி பிடிபடுவதில்லை என்பது மட்டுமல்லாமல், சுயேச்சா கவிதையிலும் ஒரு ஓசை ஒழுங்கு காணப்படுகிறது என்பதுமாகும்! ஒரு தமிழறிஞர் பாசுரங்கள் யாப்புக் கடங்காதவை என்கிறார். இது உண்மையா என்பது எனக்குத் தெரியாது!
கவிதையைப் பற்றி எழுதுகையில் எனக்கு வாலரி கூறியது ஞாபகம் வருகிறது: வசனத்தில் வார்த்தை ஓர் உத்தேசத்துடன் உபயோகப்படுவதால், அவ்வுத்தேசம் கழிந்தவுடன் அது அழிகிறது என்றும், கவிதையில்தான் அக்ஷரங்கள் அமரத் தன்மைப் பெறுகின்றன என்றும் கூறுகிறார். இது இவ்வாறு அன்று என நிருபிக்க முடியும் (வசனத்தைப் பற்றி) என்று டி. எஸ். எலியட் கூறுகிறார். மேலும் வாலரி கவிதையில் பாஷை வசனத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு இயங்குகிறது என்றும், இதை எடுத்துக் காட்டுவது உபயோகமாக இருக்குமென்கிறார். இக் கருத்து புதுக் கவிதைக்காரர்களுக்குப் பயன்படலாம்.

என் கவிதைகளில் சுசீலா என்ற சங்கேதச் சொல் மூலம் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தைக் கொண்டு பல அனுபவங்களை நான் அளக்க முயற்ச்சிக்கும் கவிதைகள் 'கொல்லிப்பாவை' வரிசை. 'காட்சி' அனுபவச் சிதறல்களைச் கலை வண்ணமாக்கும் முயற்சி. நான் கவிதை உட்செவியில் எப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கையைச் சார்ந்தவன். என் கவிதைகளை இன்னமும் சோதனா பூர்வமாகச் செய்து பார்க்க வேண்டுமென்ற சை எனக்கு.

இதுகாறும் நான் எழுதியவற்றிலிருந்து எனது எழுத்தாள நண்பர்கள் தோல்வி மனப்பான்மை உறக்கூடாது என்பதையும் கூற வேண்டும். நான் எழுத்துலகில் புகுவதற்கு ஒரு கட்டத்தில் ஒரு சில சிரியர்கள் எனக்கு உதவினார்கள்; அடுத்த கட்டத்தில் வேறு எழுத்தாளர்கள். இதை நினைவில் வைத்துக் கொண்டுதான் ஒரு கவிதையில் எழுதினேன்.

"வேளை வந்துற்றபோது நாதன் வடிவில் நாலிருவர் வந்து போவார்"னால், ஒரு எழுத்தாளனுக்குத் தன் நிலை அறாமலிருப்பதுதான் முக்கியம் என்பதையே நான் வற்புறுத்துகிறேன். தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள், இலக்கியத் தரம் வாய்ந்தவை அல்லாதவை, புஸ்தக ஸ்தாபனங்கள் எல்லாமே பெயரெடுத்த சிரியர்களைத்தான் அங்கீகரிக்கின்றன. ஒருவெளை இது இப்படித் தான் இருக்க முடியும். னால், இந்தக் கட்டத்தை அடையும் வரை ஒரு எழுத்தாளன் சற்றுக் கஷ்டப்பட வேண்டியதுதான்! இந்தக் கட்டத்தை அடைந்த பிறகும் அவன் தன் சுயத்தன்மையை விட்டுக் கொடுக்காமலிருந்தால் அவன் சாதனை தரத்திலும் வளத்திலும் சிறப்புறும். எது என்னவானாலும் நண்பர் நீல பத்மனாபன் பாஷையில் ஒரு எழுத்தாளன் வாழ்வே "ஏகாந்த யக்ஞத்தின் சீதள ஒளியில்தான் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது" என்று சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொள்கிறேன்.
-நன்றி மரத்தடி
1 comment:

Chitra said...

hai ramesh,
i think i am the only person who did not write anything about yr blog so far! okay! why can't you write something regularly or publish yr drawings. i am very eager to see yr drawings.
smile please
chitra