Tuesday, October 28, 2008

கோட்டோவியம்-1


கவிதை எழுதுவது காக்காய் வலிப்பைப் போல ஒரு வியாதி, தாக்குதல் துவங்கி விட்டால், பஸ் டிக்கெட்டோ, மடிகணினியோ, கைத்தொல்லைப் :) பேசியோ ஏதோ ஒன்று வேண்டும். அதற்கு இணையான இன்னொரு வியாதியைச் சொல்ல வேண்டுமானால் வரையத்துடிக்கும் மனம். முதல் வியாதிக்கான அதே நோய்க்கூறுகளையும், அதே சிகிட்சை முறைகளையும் கொண்டது.

Tuesday, September 30, 2008

மீரா



எனக்கு மிகவும் பிடித்த குறியீடு, எம்.எஸ் பாடிய மீரா பஜன்களுடன், ஒரு அழகான சிலையையும் நான் பார்த்ததிலிருந்து, மீராவை கோட்டோவியங்களாக்கிக் கொண்டிருந்தேன்.

Raag Meera என்னும் தலைப்பில் அவற்றை காட்சிப்படுத்தினேன்.

எளிமையும், இசைவும், கொண்ட கருப்புக் கோடுகள், தூய வெண்தாளில் மிதந்து கொண்டிருக்கும், இசை அனுபவங்கள். அவை.

இந்த மீரா என்னுடைய முகவரி அட்டையில் போடவென, கடையிலிருக்கும் கணினியை கொண்டு வரைந்தது. மிகக் குறைந்த பிக்ஸெல்லில் வரைந்து பெரிதாக்கியதில் ஏற்படும் விவர இழப்புக்கு வருந்துகிறேன். கிட்டத்தட்ட இதே போன்றதொரு பிரதி துளசியக்காவிடம் இருக்கிறது.

Saturday, September 27, 2008

மேலும் ஒரு சிறுகதை - கயிற்றரவு



புதுமைப் பித்தன் 'நாசகார கும்பல்'ன்னு தலைப்பிட்டு ஒரு குடும்பக் கதை எழுதியிருப்பார்.!
அதே போலத்தான் 'கயிற்றரவு' என்ற தலைப்பில் ஒரு சீரியஸ் இல்லாத கதை...சிங்கை தமிழ் முரசில் வெளியானது இக் கதை. வாசித்துப் பாருங்க.

********************



கயிற்றரவு!

சுப்பிரமணியன் ரமேஷ்




எங்கே இருக்கிறேன்?
இந்த இடம் என்ன இடம்?
எப்படி சாப்பிடுகிறேன்? எப்போது தூங்கி எப்போது விழிக்கிறேன்?-


எதுவுமே பிடிபடாமல் மொத்த வாழ்க்கையும் ஒரு வியப்பென மாறிப் போயிற்று சிதம்பரத்திற்கு! இது எல்லாவற்றிற்கு மேலாய் வள்ளி ஏன் இன்னமும் வந்து தன்னை பார்க்கவில்லை என்பது ஒரு பெரும் புதிராய் இருந்தது. யாரேனும் தந்தியாவது குடுத்தாங்களா? கேட்கலாம்ன்னா யாரையும் பார்க்க முடிவதில்லை. தூக்கத்திலோ, மயக்கத்திலோ டாக்டர்ங்க வந்து போயிடராங்களா, எல்லாம் தெளிவில்லாம தெரியரதுக்கு என்ன காரணம்? யோசிக்க முயன்றதில் மறுபடியும் இருட்டிக் கொண்டு வந்தது, தூக்கமா? மயக்கமா?


எது கனவு, எது நனவு என இனம் காணுவதும் மிகக் குழப்பமாய் இருந்தது, தொடர்ச்சியாய் தன் மகள் வள்ளியம்மையின் நினைப்பு மறுகிக் கொண்டிருக்கும் வேளைகளில் தான் விழித்திருப்பதாகவும், குழப்பமாய் நகரும் பெரிய பெரிய உருவங்கள் தென்படும் வேளைகள் கனவின் ஒரு பகுதியாகவோ அல்லது தொடர்ந்து செலுத்தப் பட்டிருக்கும் ட்ராங்குலைசர்கள் பரப்பும் பிரம்மையின் ஒரு பகுதியாகவோ இருக்கும் என்னும் முடிவுக்கு அவர் வந்துவிட்டிருந்தார். அதற்கு நேர் எதிர்தான் நிஜம் என்றாலும் அவர் வாதிடும் நிலைமையில் இல்லை.



இடையில் ஒருமுறை விழிப்பு வந்தபோது இருளை மட்டுமே பார்க்க முடியும் அளவிற்கு இருட்டாக இருந்தது, சின்ன வயசில் ஐயா காரியாப்பட்டியில வயலுக்கு கையைப் பிடிச்சி கூப்பிட்டுப் போவார். அவரோட மொடமொடப்பான வேட்டி மட்டும் மங்கலாத் தெரியும், சில்லுனு காத்தில ஒரு வாசம் கமக்கும், 'தாழம்பொதருலே அது, எட்டதள்ளி வா, பெரிசு எதனாச்சும் வந்து புடுங்கி வைக்கப்போது..'கைக்கு மேலாக இருட்டிலிருந்து கரகரத்த குரல் வழியும். மொரமொரப்பான வெடிப்பு விட்டிருக்கும் ஆள்காட்டி விரலே ஒரு வித கண்டிப்புடன் கிட்ட நெருக்கி நடக்கச் சொல்லி சைகை செய்யும், அதுவே தான் துணையாய் இருப்பதாய் அபயம் தரும். கைக்கு மேலாக இருட்டிலிருந்து கரகரத்த குரல் வழியும். லாந்தரின் வெளிச்சம் மேல் பக்கம் கரி அப்பின கண்ணாடி வழியா, கொஞ்சம் போல ஈரவாடையடிக்கும் செம்மண் சாலையை பொன்போல மெழுகிவரும். லாந்தரின் திரி 'இப்போ செத்திடுவேன்-இப்ப செத்திடுவேன்'னு ஆடிக்கிட்டே வரும். வெளிச்ச வட்டத்துக்கடியில் ஒரு கருப்பு வட்டம் தரை மீது வழுக்கிக்கிட்டே போகும், ஓடி ஓடி அதை மிதிக்க முயலும் சிதம்பரத்தை, 'ஏலே சொம்மா நீ வரமாட்டே? லாந்தர்ல சூடு வாங்கினா உங்கம்மாக்காரி எனக்கு கஞ்சி வைக்கமாட்டா' எனக் கட்டுப்படுத்துவார். ஆனாலும் அம்மாவாசை ராத்திரிகளில பொதரெல்லாம் நட்சத்திரங்களாவும், ஒளியின் நீந்தலாவும் மின்மினிப் பூச்சிங்க தென்பட்டா நின்னு வேடிக்கைப் பார்க்க அனுமதிப்பார். இவ்வளவு வருசங்கழிச்சி இதெல்லாம் ஞாபகம் வருதேன்னு ஆச்சரியமாக இருந்தது சிதம்பரத்துக்கு. அறுபது எழுபது வருசத்துக்கு முந்தி நடந்ததெல்லாம் இவ்வளவு தெளிவா நினப்புக்கு வருதே அப்பிடின்னா அதெல்லாம் எங்க பதிஞ்சிருக்கும்ன்னு ஆச்சரியமா இருக்கு, தனக்குள்ளாகவே வியந்தார் சிதம்பரம். சீக்கா படுத்து இரண்டு வாரமிருக்குமா? இரண்டு வருடமாச்சி, மூணு வருடமாச்சின்னு சொன்னாலும் கூட நம்புவேன்... சமீபத்தில நடந்ததெல்லாம் குழப்பமாய் மறந்து போக எப்பத்திய நெனப்பெல்லாமோ வருதே...மருந்தாதான் இருக்கனும்! இந்த மருந்துங்க செய்யரத நினைச்சா ஆச்சரியமா இருக்கு, தனக்குள்ளாகவே வியந்து கொண்டார்.


அழகம்மைதான் எந்த மருந்தும் காப்பாத்த முடியாம ரோகத்தில கிடந்து போய் சேர்ந்தா, மூணு வருஷ வள்ளிக் குட்டியை சிதம்பரத்திடம் சேர்ப்பிச்சிட்டு. ' ஆத்தாவைப் பத்தி யாருக்கும் தெரிய வேணாம், நீயே போதும் எனக்கு அப்பச்சி'ன்னு ஆளான சடங்கு செய்த அன்னிக்கி வள்ளி சொன்னப்ப அவருக்கு அழுகை முட்டிகிட்டு வந்திச்சி, அறுப்பு முடிஞ்சப்பறம் வருமே ஒரு நெறைவு அது போல இருந்திச்சி...கருந்தேக்குல கட்டிப் போட்டிருந்த சாரங்களையும், உத்திரங்களையும் பார்த்துகிட்டேருந்தார், அழுகையை அடக்க வகை தெரியாது. சாணி தெளிச்சி, போட்டிருந்த கோலத்தைக் கலைச்சது போல கணவதி வீட்டு ஆச்சி ஆலத்தி கரைச்சல ஊத்தின போது கூட ஏதோ ஒரு நெனப்பு கண்ணுல தண்ணியா ஊத்திச்சி. அழகம்மையோட கை பட்டதெல்லாம் துலங்கும். அவள் கோலம் போட்டா இழையில ஒரு பிசிறிருக்காது...புள்ளி இடவெளி ஏறுமாறா இருக்காது. கிளியோட மீனாட்சியும், சப்பரத்தில தோரணங்கள் தொங்கத் தொங்க தேருமாய் வீதியே பளிச்சின்னு ஆகிப் போகறது போல வண்ணப் பொடிகளில் தேர்ந்த சித்திரக்காரனின் மனசோடும், நுட்பத்தோடும் போடுவா வள்ளியம்மை. அதை மிதிச்சி நடக்கவே மனசே வராது. 'ஏ...வள்ளி வாசலை அடச்சி கோலம் போட்டியன்னா மனுசன் எப்படி உள்ளாரக்க வர்றது?'ன்னு செல்லமா கோவிச்சிக்கக் கூட செஞ்சிருக்காரு! பள்ளத்தூரிலிருந்து கானாடுகாத்தானுக்கு போயிட்டு வரும் போது குமரன் ஸ்டோரிலயிருந்து பளப்பளான்னு மின்னும் ஆப்செட் கோலப்புத்தகங்களை எல்லாம் வாங்கி வந்து தருவாரு, சிவகாசி மசியும், புதுத்தாளுமாய் ஏகத்துக்கும் புதுக்கருக்கு கலையாம வாடையடிக்கும். புத்தகத்தால அத்தனை வாஞ்சையை தர முடியுன்னு தெரிஞ்சா, பிரிண்ட் போடறவன், மசி கலக்கறவன், பின்னடிக்கிறவன் எல்லாரும் இன்னமும் கொஞ்சம் சிரதையெடுத்து அழகா செய்வான் அவனவன் வேலையை.


மகளோ சிதம்பரத்திற்கு இம்மியும் குறைந்தவளில்லை, அண்ணாமலை தோப்பில கிடந்த கிளி கொத்தின மாங்காய், பள்ளி கூடத்தில மகாபலி புரத்துக்கு டூர் போனப்ப எவளோ வெள்ளக்காரி கொடுத்தான்னு பீஸ் போன ப்ளாஷ் பல்பு, வெள்ள வெளேர்ன்னு கையகலத்துக்கு கிளிஞ்சல், சந்தையில நல்லாயிருந்ததுண்ணு பழுப்பு கலரில அழகா பச்சை கொடி ஓடறாப்பல பார்ட்டர் போட்ட பாம்புத்தோல் மணி பர்ஸ், இப்படி தனக்கு ஒசத்தியா பட்டதெல்லாத்தையும், அப்பச்சிக்கென கொண்டு வந்து சேர்ப்பித்தாகிவிடும்.


கல்யாணமாய் மறுவீட்டுக்கு வரும் போதுகூட வாசலுக்கு மாட்டறத்துக்குன்னு நூலால பின்னின ஒரு அலங்கரிப்பை மாட்டிட்டுத்தான் போனா...அவங்க சின்னாத்தா கேட்டப்பக் கூட விடாப்புடியா எங்க அப்பச்சிக்குத்தான்னு சண்டை பிடிச்சி கொண்டுவந்தான்னு சிரிச்சபடி ஆச்சி சொல்லிப்பிட்டு போனதில் சிதம்பரத்திற்குப் பெருமையாகவும், மதர்ப்பாகவும் இருந்தது.


தூங்கிப் போயிருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டார் சிதம்பரம். யாரோ நெருக்கமாகப் பார்த்துக் கொண்டிருப்பதாய் தோன்றவே சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தார்...பார்வைத் தெளிவற்று மசமசப்பாய்த் தெரிந்தது, கண்கள் எரிச்சலாய் இருந்தது. கைகளால் கண்களைத் தேய்த்தால் சரியாகக் கூடும், ஆனால் கைகள் என்ன...தலை முதல் கணுக்கால்கள் வரையான எல்லா அணுக்களும் மூளையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு ஒரு பெரிய கூத்தின் உச்சக் காட்சிக்கென மௌனமாய்க் காத்திருப்பதைப் போன்றும், நெருப்புக் குழியில் இறங்கிப் போகும் கால்களின் இயக்கம் போல இயங்கிக் கொண்டும் விடுபட காத்திருப்பதைப் போன்றும் இருந்தது. நெஞ்சின் இடது பாகம் முழுதும் வலி. உடல், வியர்வையைப் பூக்களாய்ப் பூத்து வலியிடம் பிரார்த்தனையாய் சமர்ப்பித்துக் கொண்டிருந்தது.

மோகரித்த முழவாய், முரணித்து முரணித்து ருத்ர உக்கிரமாய் வலி மேலெழ மேலெழ, உடல் தன் முழு கவனத்தையும் இந்த வலியின் ஓங்காரத்தில் ஒன்றித் தன்னுணர்வை இழந்து கொண்டிருந்தது. வலியின் ஆதி மொழியில் புலன்கள் அமைதி பெற்றன. மழை விடுபட்ட கணத்தில் அளவற்ற துல்லியத்தில் அழகம்மை கருணையும், புன்னகையுமாய் படுக்கைக்குப் பக்கத்தில் காத்திருந்தாள். ரோகம் பீடித்த அழகம்மையில்லை, தளிர்ப் புன்னகை சிந்த தான் மாசமாய் இருந்ததைச் சொன்ன அழகு, எல்லாவற்றையும் காத்து ரட்சிக்கும் காமாட்சி, கருணாசாகரி, குல தெய்வமாய் தன் குலம் வளர்க்கும் தேவியார் அம்மன். தன் உயிரின் ஏதோ ஒரு பகுதியில் கலந்துப் போய் விட்ட ஆருயிர். அவசரமாய் எழுந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டே சொன்னார், "அட ஆண்டவா என்ன ஒரு பயங்கரமானக் கனா!" திடுப்பென அழகம்மைதான் செத்துப் போயிட்டாளே என்ற நினைப்பெழ, கனவுக்குள்ளே கனவைப் பற்றிப் பேசுவதாக எண்ணி நகைத்துக் கொள்ளவும் செய்தார்.

"பொக்கை வாயைக் காட்டி சிரிக்கிறாம்பாரு!" வாஸ்த்தல்யம் பொங்க மழலையை குனிந்து பார்வையால் அள்ளிக் கொண்டாள் வள்ளி, அவளின் நெற்றிக் கற்றை திராட்சைக் கொடியென மெல்ல காற்றில் அசைந்தது. ரோஜா வண்ணத் துணிகளைச் சுருணையாய்ச் சுருட்டிக் கொண்டு, கட்டை விரலை மற்ற நான்கு விரல்களாலும் இறுகப் பற்றியவாறு அண்டைக் குடுத்திருந்த தலையணையை அம்மாவின் மார்பகங்களாய் பாவித்து தூங்கிக் கொண்டிருந்த சிசுவின் பிருஷ்டங்களை வலது கையாலும், கழுத்தையும், சிரஸையும் இன்னொரு கையால் மென்மையாய் அணைத்தவாறு தூக்கி தன் மூக்கால் மெல்ல தன் மழலையின் மூக்கை நிமிண்டினாள் வள்ளியம்மை. கிளர்ந்த பால் மணத்தை சுகமாய் அனுபவித்தபடி, "பால்கார பாண்டு! பால்கார கோண்டு!" எனக் கொஞ்சினாள். இயல்பூக்கத்தில் உந்தப்பட்டு, இளம் உதடுகளை சப்புக் கொட்டி பால் காம்புகளை தேடிக் கொண்டிருந்தது குழவி. இளக்கமாய் இளஞ்சூட்டோடிருந்த அக்குட்டி கம்பங்களியை நினைவூட்டியது. வள்ளிக்கு தன் அப்பாவின் ஞாபகம் வர, கீழிதழ் இழுபட்டு, மூக்கு விடைத்து, கண்களின் கலக்கத்தின் வழியே ஒரு ஆழ்ந்த துயரின் சாயல் நெகிழ்வாய் நிலைத்தது. திரளும் கண்ணீருடன் குழந்தையைப் பார்த்து முறையிட்டாள், "ஏன்டா செல்லம்! உன்னைப் பார்த்தா எங்க அப்பச்சி உச்சி குளிர்ந்து போயிருப்பாரேடா! உன் மூத்தாவில நனையாம அவர் ஆன்மா எப்டி சாந்தி அடைஞ்சதோ? ஏன்டா வாண்டு நீ ஒரு ஒண்ர வருஷம் முன்னாடி பொறந்திருக்கக் கூடாது?" வள்ளி கைகளை வசதியாய் சரி செய்ய முயல்கையில் இடுப்பிலிருந்த துணி கீழே விழ, வளைவான மெல்லிய கால்களை குளிரில் இடுக்கிக் கொண்ட குழவி மெல்ல திமிர்த்து உடலை வளைத்து நெட்டி முறித்து கண்களை பிரயத்தனத்தோடு திறக்க முயன்றது. வெளிச்சம் கூச கண்களை இடுங்கிக் கொண்டார் சிதம்பரம். தெளிவற்ற பார்வையின் ஊடாக மிக அருகில் வள்ளியின் சாயலில் முகம் தெரிந்தது, மிகப் பெரிதாய். 'அட மறுபடி கனவு! எல்லாவற்றையும் ஞாபகமாய் வீட்டுக்குப் போனவுடன் வள்ளியிடம் சொல்லனும். கனவில அழகம்மையைப் பார்த்ததையும் கூட...' இமைகள் தானாகவே மூடிக்கொள்ள சிரிப்பு பொங்கி வந்தது சிதம்பரத்திற்கு.

"பாரு! பாரு! சிரிக்கறாம்பாரு! சிஜ்ஜு பைய்யா, புஜ்ஜு குட்டி! நரிக் கனவாடா பாப்பாக்கு!" என்றவாறு நெஞ்சோடு அணைத்து, 'பச்'சென முத்தினாள் வள்ளி.



@@@@@




Sunday, September 14, 2008

உங்களுக்காக ஒரு சிறுகதை - கண்டடைதல்

சமீபத்தில் மலேசிய பத்திரிக்கையான 'வல்லினத்தில்' வெளியான என்னுடைய சிறுகதையை உங்கள் முன் வைக்கிறேன்...படித்து விட்டு உங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.




கண்டடைதல்
சுப்பிரமணியன் ரமேஷ்


இளநீல நிறத்தில் படிகம் போல தெளிந்த நீர், மர்மங்கள் ஏதுமற்று ஆழ்ந்த மோனத்தில் இருப்பதாகத்தான் இருந்தது. குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாய்ச் சிறகடித்திருந்தனர். ஒளி ஊடுருவும் கண்ணாடிச் சுவரின் மீது நீரின் விளிம்பு அவ்வப்போது பாம்பு நெளிவதான தோற்றம் கொண்டது. மேலிருந்து கதிர்களாய் கசிந்த சூரியன் அலைகளுடன் விளையாடி, ஒளியும் நிழலும் கலந்த ஜால வினோதங்களாய் பரவசப்படுத்தியது. ஒரு மலாய் குழந்தை தன்னுடைய கோதுமைக் கரங்களால் எட்டிப் பிரதிபளித்த ஒளிக் கோலத்தை தொட முயன்ற கணத்தில் கூட அடுத்த கணத்தின் உக்கிரம் தெரியவில்லை. குழந்தையின் கைகளிலிருந்து மூன்று அடி தூரம்தான்... வெறி கொண்ட கரடி எம்பிப் பாய்ந்தது...நீரைக் கிழித்தவாறு தலையைச் சிலுப்ப...திறந்த வாய், பற்களிலிருந்தும், உடலிலிருந்தும் வழிந்த எச்சில்...வெறி நாயை நினைவு படுத்தியது. சட் சட்டென நிகழ்ந்த நிகழ்வுகளின் முழு அர்த்தமும் புரியும் முன்னர் எழுந்த வேகத்தில் 'சளப்'பென நீரில் ஆழ்ந்து மறைந்து போனது. குழந்தைகள் பயத்தில் கீச்சிட்டு அலறி ஓடினார்கள். அபிநயா ஓடிவந்து ஆதித்யனின் கால்களைக் கட்டிக் கொண்டாள். ஆதித்யனும் பயத்தில் சில தப்படிகள் தன்னையறியாமல் பின்னால் போயிருப்பதை அறிந்து வெட்கம் கொண்டான்.



சற்றுமுன் விலங்கியல் பூங்காவின் அறிவிப்புப் பலகையில் படித்த விவரங்களின் தொகுப்போ, கார்ட்டூனில் பார்க்கும் 'பூ-பேரோ', அல்லது அணைத்துக் கொள்ளத் தூண்டும் 'டெடி பேரோ' அல்ல... ராட்சஷக் காட்டு மிருகம்! பனிப்புலியின் தலையைத் தன் கரங்களினாலேயே நசுக்கிச், சிதைத்து, உருக்குலைத்து அழித்துக் கொல்லும் திறன் கொண்ட விலங்கு. கண்களில் அந்நியமும், பகைமையும் தெறிக்கும் மிருகம். ஆழத்தில் நீந்தி வந்து ஆக்ரோஷமாய் எம்பியிருக்க வேண்டும். கண்ணாடிச் சுவர் தந்த அபயத்தில் அவனின் சுவாசம் மீண்டது.



• • • •


நேற்று நினைக்கக் கூட இல்லை, இன்று, இங்கே இப்படிக் கரடியைப் பார்த்தபடி பொழுது கழியுமென்று, கடந்த ஒரு வாரகாலமாய் இலக்கின்றி கழியும் பகல் பொழுதுகளும், சஞ்சலத்தின் சகல பயங்களுடனும் அலைகழிக்கும் இரவுகளும், விரல் சுடும் சிகரெட்டுகளில் எண்ணிக்கை கூடிப் போனதும், பழகிக் கொண்டிருக்கிறது என்றாலும் கூட... அலைச்சலில் அபிநயாவின் பிறந்த நாளை மறந்து போயிருந்தான், குழந்தை காலையில் ஏக்கமாய் முகத்தைப் பார்க்கையில் அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. இல்லாவிடில் இப்படியான ஒரு வார நாளின் புதன் கிழமை பகல்பொழுது, நெரிசலற்ற, பரபரப்பற்ற விட்டேத்தியான நாளாக இருந்திருக்குமா? இயந்திரத்தனமான பழக்கம் விட்டுப் போனதில் ஏதோ இனந்தெரியாத அரிப்பும், பயமும் விடாப்பிடியான குற்றவுணர்வாகி அவனின் இருப்பைத் துளைத்துக் கொண்டிருந்தது.


விலங்கியல் தோட்டத்திற்கு நுழைந்து இந்த காட்சிச் சாலைக்கு வந்ததும் கூட எதேச்சையானதுதான்... அதாவது தன்னளவில் எதேச்சையானதாகத் தோன்றுவது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் ஏதேனும் அர்த்தமிருக்கும் என்றோ, ஒரு பெரிய வரைபடத்தில் ஒரு சிறு பகுதிதான் இப்போதைய வாழ்க்கை என நம்புங்கள் என்றோ, வாழ்க்கையே நிகழ்வுகளின் ஊடான கண்டடைதல் என்றோ, யாரேனும் சொல்லியிருந்தால் இந்த நிலையிலும் அவன் சிரிக்கக் கூடும்!


நீண்ட தூரம் போகுமென நம்பிய பாதை அது. சட்டென ஒரு இடது புறத் திருப்பத்தில் முற்றாக முடிந்து போய்விட்டது. காங்க்ரீட் கூரையடைத்த காட்சிச் சாலை தென்பட்டது. அதன் முடிவில் ஒரு மேடான புல்வெளிப் பகுதி. அதற்கு அப்பால் என்னவென யூகிக்க இயலாத வண்ணம் ஒரு முற்றுப் புள்ளியாய் இருந்தது. அதித்யன் தன் வாழ்க்கையை குறியீடாகக் காட்டிடும் ஒரு முற்றுப்புள்ளி என அம் மேட்டைக் குறித்து நினைத்துக் கொண்டான்.


தார்ச்சாலைச் சரிந்து குறுகிக் கொண்டே போய் காங்கிரீட் நடைபாதையாய் முடிந்தது. வானம் இருபுறமும் வாதாம், பலா, பனை,ஆல் என காட்டு மரங்களைக் கரையாகக் கொண்டு ஒரு நீல நதிபோல ஒழுங்கற்று பரவிக் கிடந்தது. அபிநயா எந்த விதக் கவலையுமற்று பொங்கிக் ததும்பிக் கொண்டிருந்தாள். விரல்கள் மெல்ல நெகிழும் தருணத்தில் கட்டவிழ்ந்த கன்றாய் துள்ளலோடு துள்ளித் பிரிந்து ஓடி விடுகின்றாள்! மிருகக்காட்சிச் சாலைக்குள் வந்து இரண்டு மணி நேரமாகிறது. அதே துள்ளல்!


ஆதித்யனுக்கும் இத்தகைய ஒரு தனிமை தேவையாயிருக்கிறது. நீண்ட சவுக்கின் நுனியென எண்ணங்கள் சுழன்று சுழன்று மனதினை விளாறுகிறது. ரணத்தினை விடாமல் ரத்தம் கசியும்படி சொறிந்து, சொறிந்து, துன்புறுத்திக் கொண்டிருக்கிறது சுயபச்சாதாபம். ஹிம்சை. 'என்ன செய்யப் போகிறாய்? என்ன செய்யப் போகிறாய்?' என்ற கேள்வியை அடக்க வழியறியாது தவித்துக் கொண்டிருக்கும் அதித்யனை அவநம்பிக்கை மெல்ல அறுத்துக் கூறு போட்டுக் கொண்டிருக்கிறது.



அபிநயாவின் குதிப்பு இப்போது நின்றுவிட்டது, மருதோன்றிச் செடியருகே துருதுருக்கும் தேன்சிட்டினைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளின் மனசு, மெல்லிய உடலின் அசைவுகளனைத்திலும் பிரதிபளித்து சந்தோஷத்தின் அதிர்வுகளை உடல்மொழியாக வெளிப்படுத்தியபடி இருக்கிறது. தன் மகள்தான் எனினும் முற்றிலும் வேறான குண வெளிப்பாடுகள் கொண்டவளாகத் தோன்றினாள் அபிநயாஆதித்யனுக்கு. அதிலும் இப்போதைய மனோனிலையில். மகிழ்வின் இசையை சதா காட்சிப் படுத்திக் கொண்டு இருக்கும் அவளின் பருவத்திற்கு மீண்டும் போகமாட்டோமா என ஏக்கம் எழுந்தது ஆதித்யனுக்கு.


• • • •

கண்ணாடிச் சுவர் வழியே உள்ளே பார்த்தான்ஆதித்யன்.ஆழத்தில் இரு பெரிய பாறைப் படுகைகளைக் கிடத்தி இயற்கையான சூழலை ஏற்படுத்த முயன்றிருந்தார்கள். நீள் வட்டமான குளத்தில் தண்ணீர் பகுதி முடிவடையும் இடத்தில் சலவைக் கல்லாலான படிகள் இருந்தன. படிகள் மேலேறி முடியும் இடத்தில் மணல் மேடு ஒன்று பெரிய பாறைகள் இருந்த இடம் நோக்கிப் போனது. அதற்கும் அப்பால் அறை போன்ற இடம்.


‘இனுக்கா!’ எனப் பெயரிடப் பட்டிருந்த அந்த கரடி, அற்புதமான பசும்பொன்னின் சாயைகள் தென்பட பிரகாசமான வெண்ணிறம் கொண்டிருந்தது, தேவதைகளின் நிறம், கிருஸ்மஸ் தாத்தாவின் தாடி..ஆதித்யனுக்கு அந்தக் கரடியைப் பார்க்க பொறாமையாக இருந்தது! மேலிருந்து அருவி போல அந்தத் தடாகத்தில் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் நீர் படிகம் போலத் தூய்மையாக இருந்தது. குளிர்பதனப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். அபத்தமாக இருந்தாலும் தன்னை அம் மிருகத்துடன் ஒப்பிட்டுக் கொள்வதை நிறுத்த முடியவில்லை அவனால். வெம்மையின் கசகசப்பில் அவனது உள்ளாடை முழுதும் நனைந்து விட்டிருந்தது. துடைப்பதற்கான டிஸ்யூ-தாளை எடுத்துக் கொள்ள மறந்து விட்டிருந்தான். முகத்திலும், கழுத்திலும் வியர்வை வழிந்து சலிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதோடு இருண்மை கொண்ட அவனது சிந்தனைகளின் கொடுக்குகள் அவனை ஓயாது கொட்டிக் கொண்டிருக்க எரிச்சல் ஆத்திரமாகவும்,ஆத்திரம் எவர் மீதும் இலக்கு கொள்ள முடியாததால் வன்மமாகவும் அவனின் மேலேயே அனலாய்க் கவிழ்ந்து கொண்டிருந்தது. ஒரு வாரத்திற்கும் மேலாகிறது, அவனின் தடுமாற்றமும், சினமும் இன்னமும் ஓயவில்லை. கவலையாகவும், பதற்றமாகவும் உருமாறி, அவனின் எல்லா செல்களிலும் புகுந்து கொண்டிருக்கிறது. ' அடச்சே! இவற்றிலிருந்து விடுபடத்தான் விலங்கியல் பூங்காவிற்கு வந்தோம், இங்கேயும் பொம்மலாட்ட பொம்மை போல உணர்வுகளில் தத்தளிக்கிறோமே..' என நினைத்த போது ‎நெஞ்சம் குமுறிஆண்டவனை திட்டித் தீர்த்தா‎ன்ஆதித்யன்.


• • • •



ஹோ-சிங்-ஹி. மனிதவளப் பிரிவின் தலைவர்,ஆதித்தியனின் வந்தனத்திற்குப் பதிலாக இறுக்கம் நிறைந்த புன்முறுவல் ஒன்றைத் தந்தார்! உதடுகள் பிரியாமல் நேராக விரிந்த விதம் அலுவலக சூழலில் இறுகி உறைந்தது.ஆதித்யன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சாம்பல் வண்ணச் சுவரில் அலங்காரமின்றி இருந்த வட்டச் சுவர்கடிகாரம் மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது, குளிர்பதனத்தின் ஹம்மைத் தவிர்த்து சப்தங்கள் ஏதுமில்லை. நீல நிற முழுச்சட்டையில் பொம்மை போல உறைந்திருந்த அவர் சட்டென உயிர் பெற்றார். 'உட்காருங்க' என சம்பிராதாய ஆங்கிலத்தில் உச்சரிக்கும் போதே, கைகள் உயர்ந்து ஆதித்யன் உட்கார வேண்டிய இருக்கையைக் காட்டியது. அவரது இயக்கத்தில் இருந்த செயற்கைத்தன்மை ஆதித்யனைக் கலவரப் படுத்தியது. ஹோ-சிங்-ஹி கூப்பிடுகிறார் என்றாலே கொஞ்சம் சலிப்பும் கலவரமாகவும்தான் இருந்திருக்கிறது. 'மிஸ்டர் ஆதித்யன்! உங்களோட ஆயுள் காப்பீட்டு படிவங்கள்ள தப்பிருக்கு...', 'ஆதித்யன் உங்க மருத்துவச் செலவிற்கான பில்லில் உங்களோட அடையாள எண் குறிப்பிடப் படவில்லை.' இப்படி. ஆனால் இவையெல்லாம் பெரும்பாலும் தொலைப் பேசியிலேயே முடிந்துவிடும். தேவையானவைகளை அவருடைய உதவியாளினி க்ளோரியாவிடம் சேர்ப்பித்து விட்டாலே போதும். இம்முறைதான் முக்கியமான விஷயம் குறித்து பேச, நேரில் வரும்படி அழைப்பு. மெத்தென்றிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தும் மௌனம் கலையவில்லை. சுவர்கடிகாரத்தின் வினாடி முள் ஒவ்வொரு வினாடிப் புள்ளியிலும் 'சக் சக்'கென குதித்து அதிர்ந்து, பலமுறை சுற்றி வந்து விட்டது. ஆதித்யன் மறுமுறை அவர் முகத்தைப் பார்த்த போது, ஒரு சட்டப் புத்தகத்தை வாசிக்கும் விதமாக ஆழ்ந்து தன்னை ஊடுருவி எடை போட்டுக் கொண்டிருந்ததையும், அவரது விழிகள் ஜடத்தன்மை பெற்று, ஒரு பிளாஸ்டிக் தன்மை கொண்டதாக மாறி இருந்ததையும் உணர்ந்து, ஆதித்யன் ஒருவித அமைதியின்மையை அடைந்தான். இடது கை தன்னிச்சையாக, வலது கையின் நகவிளிம்பினை சுரண்டி பிய்க்க முயன்று கொண்டிருந்தது. ஹோ-சிங்-ஹி மெல்ல அசைந்து சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். தலைக்கு மேலிருந்த குழல் விளக்கின் ஒளி அவரின் வழுக்கைத் தலைக்கு மேல் ஒரு மங்கிய ஒளிப்புள்ளியாக பிரதிபளித்து அசைந்தது. அவரது சுட்டு விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் அகப்பட்ட பேனா. காரின் வைப்பரைப் போல அரைவட்டமாக மேஜை மீதிருந்த கோப்பின் கெட்டித்தாளின் மீது அசைந்து கொண்டிருந்தது. ஆதித்யனுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன, அதற்கிடையில் இங்கே வந்து காத்துக் கொண்டிருப்பது அலுப்பாக இருந்தது. புதிதாக வந்திருக்கும் ஆட்கள் சிறுபிள்ளைகளாக இருக்கிறார்கள். வேலையிலும் கூட விளையாட்டுத் தனமாகவே இருந்தனர். தான் இல்லாவிட்டால் அடுத்த பேட்சுக்கான 'ஹைட்ரோ-க்வின்'னை கூட நிரப்ப மாட்டார்கள், லோடிங் தாமதமானால், எம்.எம்.ஏ உற்பத்தியே கூடக் குறையக் கூடும், இன்றைய டார்கெட்டையே கூட எட்டாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


"ஏதேனும் விஷயம் உண்டா? ம்...அடுத்த பேட்ச் லோட் செய்ய வேண்டியிருக்கு பணிவாக வினவினான். ஹோ-சிங்-ஹி யின் கண்களில் ஒரு விதக் கபடத் தன்மை மின்னியதாகப் பட்டது ஆதித்யனுக்கு. தொண்டையைச் செறுமிக் கொண்டார். மறுபடியும் அசைந்து உட்கார்ந்து, ஆதித்யனைப் பார்த்த போது கண்கள் கனிவாகச் சிரிப்புடன் இருந்தது. ஆதித்யனின் உள்ளம் ஆசுவாசம் கொண்டது.


"வேலையைப் பற்றி கவலைப்படாதீங்க! மத்தவங்க பார்த்துப்பாங்க. ரிலாக்ஸ்... உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?"

"ஒரு மகள்-அபிநயா"

"அப்படியா! என்ன வயது?"

"ஆறுவயது"

"காலந்தள்ளி குழந்தை பெற்றுக்கிட்டீங்களா? உங்களுக்கு இப்போ நாற்பத்தி மூணு வயதாகுமே?"
"ஆமா ஸார்! கொஞ்சம் தாமதமாத்தான் பொறந்தா!" ஆதித்யனுக்கு வெட்கமாக இருந்தது.
விரைப்பாக உட்கார்ந்திருந்த ஆதித்யன், கால்களைக் கொஞ்சம் தளர்வாக நீட்டிக் கொண்டான்.

"உங்க மனைவி எங்கே பணிபுரியறாங்க?"

"எங்கேயும் வேலை செய்யலை, அவங்களுக்கு உடல்ரீதியாக சில மருத்துவக் குறைபாடுகள் இருந்ததால் வீட்டோடுதான் இருக்காங்க. முன்னாடி கொஞ்சகாலம் எலக்ட்ரானிக் தொழிற்சாலையில் வேலை பார்த்தாங்கலா, இப்போ சும்மாதான் இருக்காங்க, என் மகளுக்கு எப்பவுமே அம்மா, கூட வேணும்! அம்மா செல்லம்!"

"முன்னாடி நீங்க ஒரு டொயோட்டா கொரல்லா காடி வைச்சிருந்தீங்க இல்லை?"

"ஆமா அதை ஸ்கிராப் பண்ணிட்டு, நிஸான் சன்னி வாங்கிட்டேன்லா!"

அதற்குப் பதிலாக திரு.ஹோ, ஏதோ சொல்ல முற்படுவதற்குள் கதவு மெல்ல இருமுறை தட்டப்பட்டு திறந்தது.

"யா! யா!- கமின் மிஸ்டர் கெல்வின் சான்! ஒய் ஸோ லேட்? மிஸ்டர் ஆதித்யனும், நானும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்." என்றார் ஹோ-சிங்-ஹி.


"மன்னிச்சிடுங்க! ஐ.எஸ்.ஓ 2000 டிட்டிங் முடிய தாமதமாயிடுச்சு." என்றபடி, ஆதித்யனுக்குப் பின்புறமிருந்து உள்ளே நுழைந்தவர் ஆதித்யனின் மேலாளர். ஆதித்யனின் பக்கம் திரும்பி, "ஹவ் ர் யூ ஆதி?" என்றபடி தூக்கி வந்திருந்த இரண்டு கோப்புகளை மேஜையின் மீது வைத்தார். ஆதித்யன் காய்ந்திருந்த உதடுகளை அவசரமாய் ஈரம் செய்து கொண்டு, அவரை இங்கே காண நேர்ந்ததின் வியப்பு அகலாமலேயே மறுமொழிந்தான்.


இருவரும் மாண்ட்ரீனில் தந்தி போல ஒற்றை வரிகளில் பேசிக் கொண்ட போது, அடிவயிறு கலங்க ஏதோ தப்பிதமெனத் தோன்றியது ஆதித்யனுக்கு. ஹோ-சிங்-ஹி ஒரு சடங்கு போல கோப்பிலிருந்து ஒரு கவரை எடுத்து ஆதித்யனிடம் நீட்டினார். 'ஏதோ மெமோ! இம்முறை கிடைக்க வேண்டிய பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்காது', என்ற நினைப்பு ஓடியதுமே, ஆதித்யனின் கைகள் மெல்ல நடுங்கவும், உடல் வியர்க்கவும் ஆரம்பித்து விட்டது. கை நடுக்கத்துடனே கடிதத்தைப் பிரித்து வாசிக்க முயன்றான். மூளை மரத்து, கண்கள் வறண்டு எரிந்து கொண்டிருக்க, முதல்வரியைப் படித்தவுடனே முற்றிலுமாக நிலை குலைந்து மேலே படிக்க இயலாமல் கண்கள் தளும்பியது. அது அவனைப் பணி நீக்கம் செய்வதாய் அறிவித்த கடிதம். கண்ணீராகவும், ஆச்சரியமாகவும், அயர்வாகவும், மௌனமொழியால் 'ஏன்?' என்ற கேள்வி தொக்கி உறைந்தது.



அவர்கள் இருவரும் எதிர்பார்த்த எதிர்வினையாய் அவனது நிலைகுலைவும் மௌனமும் இருந்திருக்க வேண்டும். கெல்வின் சான் பேச ரம்பித்தார், கடந்த பதினைந்து ஆண்டுகளாக, ஆதித்யன் எவ்வாறு அர்ப்பணிப்பு நோக்கம் கொண்ட திறமையான ஊழியராக விளங்கினான் என்பதையும், வேலையின் போது அவனுடைய ஊக்கம் எவ்வாறு மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்தது என்றும், அவனுடைய திறமை, அனுபவம், பாதுகாப்பு குறித்த சிந்தனை எப்படி இக்கட்டான தருணங்களில் உதவியிருக்கிறது, என்பதை ஒரு வருத்தம் தோய்ந்த பாவனையில் எடுத்துக் காட்டுகளுடன் கூறினார். அவனைப் போன்ற தொழிலாளியை இழப்பது, உண்மையில் இத் தொழிற்சாலைக்கு பெரிய இழப்பு என்றார். மிகையில்லாத பேச்சு, அவர் உண்மையைத்தான் கூறுவதாக ஆதித்யனுக்குப் பட்டது. அது ஒருவகையில் உண்மைதான், இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அவன் மதிக்கப் பட்டும் கொண்டாடப் பட்டும் வந்திருக்கிறான். குறிப்பாக ஒரு முறை தரமற்றதால் எம்.எம்.ஏ'வைக் கழிவாக விற்க முடிவெடுத்தது நிர்வாகம். ஆதித்யனின் யோசனையை முயன்றதில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் நஷ்டமாகாமல் தப்பியது. அதற்கு ஆயிரம் வெள்ளி பரிசும், பாராட்டுச் சான்றிதழும் கூட வழங்கினார்கள்.



கெல்வின் நிறுத்திய போது, ஒப்பனைக் கலைந்த நடிகை தன் முகத்தினை ஆடியில் பார்த்துக் கொள்ளும் போதான கணத்தை ஒத்த, ஒரு சங்கடமான மௌனம் எழுந்தது.



இம் முறை ஹோ-சிங்-ஹி சடங்கார்த்தமான இறுக்கம் நிறைந்த குரலில் பேச ஆரம்பித்தார், "உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை பொருளியல் மந்த நிலையில் ஸ்திரப் படுத்திக் கொள்ள கடந்த இரு வருடங்களாக நிர்வாகம் எவ்வளவோ போராடிக் கொண்டிருக்கிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தே வந்திருக்கிறது. மரணக்குழியிலிருந்து தப்ப இதுதான் கடைசி முயற்சி. ஆள்குறைப்பு. நீங்கள் தனி ஆள் அல்ல. இப்போதைக்கு இன்னமும் குறைந்த பட்சம் முப்பது பேர் பட்டியலில் இருக்கிறார்கள். யாருமே இதற்கு விலக்கல்ல! தேவைப்பட்டால் நான் கூட விலகித்தான் ஆகவேண்டியிருக்கும். கம்பனி இத்தகைய முடிவை எடுக்காமலிருக்க உங்களின் மேலாளரும், நானும் எவ்வளவோ முயன்றோம். குறிப்பாக உங்களைப் போன்ற சிறப்பான தொழிலாளர்களை இழந்துவிடாதிருக்க மிஸ்டர் கெல்வின் சான் பலவழிகளில் மிகவும் முயன்றார். அதில் அவர் வெற்றி பெற முடியவில்லை. வயதில் நாற்பதற்கும் மேற்பட்ட ஆட்களை எடுப்பது, என்ற கொள்கை முடிவு நிர்வாக இயக்குனரால் தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதிக சம்பளம் பெறும் நீண்ட நாள் ஊழியர்களை வேலையிலிருந்து எடுப்பதன் மூலம், ஓரளவிற்குத் தப்பி விட முடியும் என கம்பனி கருதுகிறது."



சிறிது இடைவெளி விட்டு குரலைச் சற்று உயர்த்தி இதுவரை பேசியதன் சாரம் போல் ஹோ பேச ஆரம்பித்தார்:


" ஆதித்யன் உங்களின் வேலை இழப்பிற்கு காரணம் தகுதியின்மையோ, பணியில் நீங்கள் செய்த தவறுகளோ அல்ல, இது உங்களுக்கு ஆசுவாசம் அளிக்கும் என நம்புகிறேன். கடிதத்தில் குறிப்பிட்டபடி இழப்பு ஓய்வூத்தியங்களைத் தராளமாய்த் தர கம்பனி முன் வந்திருக்கிறது. நிர்வாகத்திற்கு உங்களின் குறைகளைத் தெரிவிக்கவோ, சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவோ உங்களுக்கு நான்கு வார அவகாசம் தரப்பட்டுள்ளது. சியர் அப் ஆதி, உங்களைப் போன்ற சின்சியரான ஆளுக்குப் பிரகாசமான எதிர்காலம் எப்பவுமே உண்டு. குட் லக் டு யூ!"

ஒரு கை குலுக்கலில் முற்றிலுமாக முறிந்து போய் விட்டது அவரது பதினைந்து வருட உறவு. வெளியேறி, தடுமாறி நின்ற ஆதித்யனை, "தானாக காரோட்டிக் கொண்டு போக இயலுமா? ஏதேனும் உதவி தேவையா?" என்று கெல்வின் கேட்டார். ஆதித்யன் மறுத்து வெளியேறும் முன்னர், எச்.க்யூ லோட் செய்யாமல் வந்துவிட்டது நினைவுக்கு வந்தது. அதை மேலாளரிடம் கூறவும் செய்தான்.


• • • •


துருவக் கரடி ஒருவித வன்மத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் அரக்க உடல் விசையுடன் நீரைக் கிழிக்க இயந்திரத்தனமாய் வலிமையுடன் அதன் முடிவற்ற பயணம் அந்த பெரிய தொட்டியில். சலவைக் கல்லாலான படிகட்டிலிருந்து பெருத்த அலையெழும்ப முங்கி, ஆழ நீந்தி கற்படுகைகளை அடையும், அதில் சரிவான பாறையின் முதுகினில் கால் தட்டுப்படும் வரையான நீச்சல், பாறை மீதான நடையாக மாறுகையில் மூக்கு, நீரின் மேலே தெரிய நீரின் கோட்டைக் கலைத்துக் கொண்டு தலை வெளிவரும், மெல்ல அது நடந்து சலவைக் கல்லை அடைகையில் அதன் இடுப்பு வரை வெளியே வந்திருக்கும். சிந்தனையற்ற இத் தொடர் நாடகம் மறுபடி மறுபடி நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வட்டமும் முடிவடைகையில் புதிய தொரு வட்டம் அதனினும் வேகமும், வலிமையும் கொள்வதாய் பட்டது ஆதித்யனுக்கு...


• • • •

அபிநயா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதற்குள் அவளுக்கு ஒரு சினேகிதி கிடைத்து விட்டாள் என்பது, இரண்டு குட்டிகளும் அவ்வப்போது கரடியைக் குறித்து வியந்து கொள்வதும், சிரித்துக்கொள்வதிலிருந்தும் தெரிந்தது. இரண்டு முறை கூப்பிட்டும் அவள் அந்த இடத்தை விட்டு நகரும் வழியாய்த் தெரியவில்லை. காற்று மொடமொடப்பாய் விட்டு விட்டு வீசியது. வெள்ளெலிக் குஞ்சின் சருமத்துடன் ஒரு வெள்ளைக்கார பெண் ஆதித்யனிடம் வந்தாள், அவள் கையில் பாதி திறந்தபடி ஒரு கோக் கேன் இருந்தது. நட்புடன் கச்சிதமாகச் சிரித்தாள். அழகான சிரிப்பும், நீலநிறக்கண்களும், துள்ளியமான பற்களும் அவளைப் பேரழகியாய் காட்டியதை உணர்ந்தான் ஆதித்யன். இவள் என் ஓவியத்தில் இடம் பெறத் தக்கவள் என்று நினைத்தான். "நீங்களும் கரடிக்கு இறையிடுவதைக் காணக் காத்திருக்கிறீர்களா?" என்றாள். விவரப்பலகையில் பிற்பகலுக்கானச் சிறப்பு நிகழ்ச்சியாக 'இறை போடுவதை' குறித்திருந்தார்கள் என்பது நினைவுக்கு வந்தது. தான் சாப்பிடுவதை மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் தனக்கு மிகவும் கூச்சமாக இருக்கும், என்று அவனுக்கு தோன்றியது. அந்தக் கரடிக்கு இத்தகைய கூச்சங்கள் உண்டா என்பது தெரியவில்லை. அபிநயாவிற்குப் புது அனுபவமாக இருக்கும் என்று அவனுக்குப் பட்டது. 'ம்' என்று தலையசைத்தான். "அது சிறப்பான நிகழ்ச்சி" என்று விவரப்பலகையில் படித்திருந்ததாகக் கூறினான். "பிற்பகல் 1.05க்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க வேண்டும், இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பித்துவிடும் என நினைக்கிறேன்." என்றான்.

"ஆமாம் சிங்கப்பூரர்கள் காலம் தவறாதவர்கள்" என்று அந்தப் பெண் கூறினாள்.

அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஆதித்யனும் மோதித்தான். அந்தப் பெண்ணிடம் விடைபெற்று, அரங்கம் போல ரசிப்பதற்கு வசதியாய் போட்டிருந்த வினைல் நாற்காலிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டான். அபிநயாவும் வியர்வையில் நனைந்த முகத்துடன் அருகே வந்து அமர்ந்து கொண்டாள். ஆதித்யனுக்கு தன்னியல்பாய் தொடர்ந்து எழும் துர்-எண்ணங்களிலிருந்து தப்பிப்பது பெரும் பாடாக இருந்தது. வெளி விஷயங்களில் சிதறிய கவனம் மாறியதுமே ஒரு வலை போல, அவை மறுபடியும் மறுபடியும் அவன் மீது கவிழ்ந்துக் கொள்கிறது. அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அவன் இடையறாது வெளிப்புறமாக புலன்களின் அசைவுகளில் மனதை வைத்து அலைந்து கொண்டிருக்கிறான். சதா புகைப்பதும் அயர்ந்து களைத்து விழும் வரை படுக்கையின் பக்கம் செல்லாமல் இருப்பதுவும். தனித்து மனைவியிடம் பேசுவதைத் தவிர்க்க, காலையிலேயே கிளம்பி எங்கேனும் ஓடிப்போவதுமே இப்போதைக்கு அவனுக்குத் தெரிந்த வழியாக இருக்கிறது. பிரச்சனைகளைத் தீர்க்க யோசிக்கிறேன் என்று ஆரம்பிக்கும் அவனுடைய சிந்தனை எல்லா பயங்களையும் கற்பித்துக் கொண்டு நம்பிக்கையை ஊனப்படுத்தும் ஒரு பாவனை என்பது சமீபத்தில்தான் பிடிபட்டது. என்ன செய்யலாம்? ஏதாவது செய்தே தீரவேண்டும். இப்போதைக்கு செலவுகளை குறைக்கவேண்டும். காரை உடனடியாக விற்பதற்கு மனோகரனைப் பார்க்க வேண்டும். இப்போது விற்பதால் கட்டாயம் $10,000 வெள்ளியாவது நஷ்டம் வரத்தான் செய்யும்... மெல்ல ஒரு விதமான ஏக்கம் போல ஏதோ ஒன்று அவனைக் கவ்வும். இந்தக் காரை வாங்குவதற்கு முன்னர் நிறைய ஷோரூம்களில் போய்ப் பார்த்திருக்கிறான். தொட்டுப் பார்ப்பான், காரின் பானட்டை மெல்லத் தடவிக் கொடுப்பான். அது எதோ நாய் பொலவும், இவனது அன்பின் காரணமாய் நன்றி பொங்க அதுவே வீட்டுக்கு ஓடி வந்து விடும், என்று நம்புவதைப் போல வாஞ்சையாய் இருக்கும். விற்பனைப் பெண்கள் குட்டை உடையில் நளினமாய் சிரித்துப் பேச ஆரம்பிக்க, அது எதுவுமே அவனைத் தொடமுடியாத வசீகரிப்பின் மயக்கத்தில், காரின் முன்புற இருக்கையில் அமர்ந்து பார்ப்பான், ஸ்டீரிங்கை மெல்ல திருப்பிப் பார்ப்பான். காரின் கதவை மூடி, தன் ஆசையையும் கொஞ்ச நாளைக்கு அடைத்து வைப்பான். இந்தக் காரினை வாங்கிய காலத்தில் மிகவும் உற்சாகமாய் இருந்தான்! நண்பர்களுக்கு விருந்து, கோலாலம்பூருக்கு அடிக்கடி குடும்பத்துடன் பயணம் என. காரில் பார்த்துப் பார்த்து, புதுப்பித்த விஷயங்களுக்கான செலவை மீட்க இயலாது. காரில்லாமல் இருப்பதைக் குறித்து அவனால் யோசிக்க இயலவில்லை. 'உலகப் போரில் ஜப்பான்காரன் வந்ததில் சொத்து முழுதும் இழந்து ரப்பர் தோட்டங்களில் திரிந்து அப்பா செத்ததைப் போல, கடைசீ காலத்தில் அல்லல்பட்டுத்தான் அலைய வேணுமோ?' என அதித்யனின் யோசனை திசை மாறும் கணத்தில், அவனின் பயங்கள் புற்றீசல்கள் போல வெளிக் கிளம்பி ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும். ஷிப்யார்ட் விபத்தில் கண்கள் போன பின்னர், கோபாலன் நாயர் வீட்டை இழந்து, மனைவியும் விவாகரத்து பெற்று போன பின், தனியாய் ஓரறை வீட்டில் முடங்கிப் போனது நினைவுக்கு வரும். உதற உதற அந்த நினைப்பு வலிமை பெறும். தன் மேலேயே சலிப்பு வரும். உருப்படியாக இடையே வேறு கூடுதல் படிப்புகளையும் படித்திருக்கலாம், வேறு விதமான வேலைகளுக்கேனும் முயற்சி செய்திருக்கலாம், என எண்ணமிடுவான். பாழாய்ப் போன ஓவியம் வரைவது மட்டுமே அவனுக்குத் தெரிந்த வேறு விஷயம். 'சைத்ரீகம் தரித்திரம்'ன்னு படியேறி வந்த உறவுக்காரர் அவன் வரைந்து வைத்திருந்த ஓவியங்களைப் பார்த்துக் கூறியது நினைவுக்கு வந்தது ஆதித்யனுக்கு. மோட்கிளியானி, வான்கோ, சவ்டின்...முக்கால்வாசி ஓவியர்களின் வாழ்க்கை அப்படித்தான் முடிந்து போயிருப்பது கசப்புடன் நினைவுக்கு வந்தது.

• • • •


திடீரென கரடியின் இயக்கம் ஓயாத அலைச்சலாய்ப் பட்டது ஆதித்யனுக்கு. இந்தப் பாழாய்ப் போன கரடி ஏன் இப்படி ஓயாமல் அலையனும்? வேளா வேலைக்குச் சாப்பிட்டு தண்ணியிலேயே நிம்மதியாய் வீழ்ந்து கிடக்கலாமில்லை? எதுக்காக இப்படி எதையோ தொலைச்சதைப் போல அலையனும்? ஆனந்தமாய் மணல் திட்டில் புரண்டு கிடக்கலாம். நிழலில் மத்தியான தூக்கமொன்றைப் போடலாம்.


வேலை முடிந்து, அயர்ந்து களைத்து வருகையில், 'தினமும் வேலைக்குப் போய்த் தொலைக்கனுமே'ன்னு இருக்கும் ஆதித்யனுக்கு. அப்போதெல்லாம் 'சேர்ந்தார்ப் போல விடுப்பு கிடைக்காதா' என ஏங்குவான். கிடைத்தால் அமைதியான ஏதேனும் ஒரு மூலைக்குப் போய் படம் வரையலாமென மனம் ஏங்கும். இப்போது அந்த உணர்வு அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவசரமாய் தவிர்க்க விரும்பி மறுபடி கரடியைக் குறித்து யோசிக்க ஆரம்பித்தான்! இந்தத் தவிப்பு எதற்காக? கரடியை ஓயாமல் விரட்டுவது எது? தாய் தந்தையரைக் குறித்த நினைவுகளா? இழந்து போன காடு பற்றிய ஏக்கமா? சூழல் தப்பி வாழ நேர்ந்த அவலமா? தப்பிக்க வழியற்று பொறிக்குள் சிக்கிய விலங்காய்த் தோன்றியது, கரடி இப்போது. 'எது பொறி?' என்பதுதான் பிடிபடாத மாயம்! மறுபடியும் துருவக் கரடி கண்ணாடியின் குறுக்காக ஆழத்தில் நீந்தி இயந்திரத்தனமாய் படுகைகளின் மேலேறுவதைக் கூர்ந்துப் பார்த்தான். இப்போதும் பார்க்க க்ரோஷமாகத்தான் தெரிந்தது, அதே சமயத்தில் யோசிக்கப் பாவமாய்ப் பட்டது ஆதித்யனுக்கு.

• • • •


பொடிக்கலரில் வட்டக் கழுத்தமைந்த டி-சர்ட்டும், அதன் மீது கரும் சாம்பலில் கையில்லாத மேலணியும் அணிந்திருந்த இந்திய வம்சாவளி இளைஞன், ஏற்ற இறக்கங்களுடன் இனுக்காவின் உயரம், எடை, உணவுப் பழக்கங்கள் என ஒயரற்ற மைக்கில் விளக்கிக் கொண்டிருந்தான். வட்ட வடிவத்தில் அமைந்த இரு பேட்சுகள் மேலணியுடன் இணைக்கப் பட்டிருந்தது. மேலணியிலிருந்த ஏராளமான பைகளிலில் அவன் விரல்கள் தன்னிச்சையாக உள் நுழைவதும் வெளிவருவதுமாக இருந்தது.


பின்புலத்தில் கரடியின் ஆர்பாட்டம் அதிகரித்து, பரபரப்படைந்தது. அது நீந்துவதை நிறுத்தி, தண்ணீரின் மீது தலையை வலுடன் தூக்கி இயன்ற போதெல்லாம் கைகளை உயர்த்தியது. கூரையில் யாரோ நின்று கொண்டிருக்க வேண்டும். ஆதித்யன் அவர்களைப் பார்க்க முயன்றான். முடியவில்லை. நேர்மேலாக நின்று கொண்டிருக்க வேண்டும். பின்னர் பதைப்பும், பரிதாபமும் தொனிக்க அவசரமாய் கரையேறி, திட்டுபோல இருந்த இடத்திற்கு ஓடி ஏறியது. தலை அவர்கள் நின்றிருந்த திசையை விட்டகலவே இல்லை. மேலிருந்து மீன் துண்டங்கள் விழுந்தன. கரடி இப்போது ஒரு கழைக்கூத்தாடியின் பரிதாப நிலையை அடைந்தது. கோமாளி போல இரு கால்களில் நின்று கைகளால் சலாம் அடித்தது. வாய் திறந்து முன்புறம் நீண்டிருந்த இரு கோரைப் பற்கள் தெரிய, மூக்கும் கரிய இரு உதடுகளும், பரபரப்பாய் சுருங்கிக் கொண்டிருந்தன. தடையற்று ஜொள் வழிந்து கொண்டிருந்தது. இனுக்கா, அதன் கூரிய மோப்ப சக்தியை இப்படி விரயம் செய்து கொண்டிருந்தது. கூட்டம், கரடி இப்படி சாப்பாட்டுக்கு அலையும் செய்கையைப் பார்த்து வியந்தது. எட்டடி உயர கிருதியான மிருகம் இப்படி மீன் துணுக்குகளுக்காக கூனிக் குறுகிக் கொண்டிருந்தது.

முற்றிலும் எதிர்பாராமல் நிகழ்ந்த, இந்த செய்கையை ''ஆவென வாய்ப் பிளந்து, பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யன், அதிர்ச்சியும், மலைப்பும் அடைந்தான். கரடியைப் பார்ப்பதைத் தவிர்க்க திரும்பிய விழிகளில், விவரப்பலகை மறுபடியும் பட்டது, உண்மையில் வெண்ணிறம் அக்கரடியின் வெளித் தோற்றமே, முடிகளற்ற கரடி கருப்பான தோல் கொண்டதென போட்டிருந்தது! அவமானமும், வெட்கமும் தனக்கு ஏன் ஏற்பட்டதென அவனுக்குப் புரியவில்லை. கூட்டம் காட்சி முடிந்து போய் விட்டது. அற்ப ஜந்து கீழே இறைந்து கிடந்த துணுக்குகளை இன்னமும் முகர்ந்து முகர்ந்து தன்னுடைய நீலமும், ஊதாவும் கலந்த நீண்ட நாக்கால் நக்கிக் கொண்டிருந்தது. அதன் செய்கை தோரணை எல்லாம் ஒரு நாயைப் போலிருந்தது. அதன் வலிவும், திறனும், வேகமும், அலைகழிப்பும் உணவுக்கான கூழைக் கும்பிடா? நாற்றமெடுத்து அழுகிக் கிடக்கும் மீன் துண்டு அதன் வாழ்வை அலைகழித்து குறுக்குவதா? ஆழத்தில் ஏதோ ஒரு சங்கிலி உடைந்தது போல அவனது மார்புக் கூடு விரிந்து, விம்மி, காடுகளைத் தழுவி வந்த புத்திளம் காற்றை அள்ளி நுகர்ந்தது.

இனி எப்போதைக்குமே அங்கே பார்க்க ஏதுமில்லை என்று பட, அபிநயாவை அழைத்துக் கொண்டு போக எழுந்தான். கால்கள் தன்னியல்பாக மேட்டை நோக்கி நடை போட்டது. 'அங்கே பாதை கிடையாது'ன்னு எதிர்பட்ட யாரோ சொன்னாங்க. 'தனியா பாதையில்லேன்னா போறதெல்லாமே வழிதான்!' என ஆதித்யன் நினைத்துக் கொண்டான். மேட்டில் ஏறுகையில் அபிநயாவின் துள்ளல் ஆதித்யனிடமும் சேர்ந்து கொண்டது.

• • • •

பின்குறிப்பு: சிங்கப்பூரர்களின் செல்லமான 'இனுக்கா' சமீபத்தில் உயிரியல் பூங்காவில் இறந்துவிட்டதென கேள்விப்பட்டேன்.