Monday, July 13, 2009

கவிதை 3

@ @ @

வெந்தணல் வெளி, அன்றி கடுங்குளிர் பனி
இவ் வாழ்வு
மணற்புயலின் பெருந்திரை
நட்பாய் புன்னகைகள்
இருந்திருக்கலாம் ஒரு வேளை!
ஒரு குவளை நீருக்காக
நான் கொன்றிருக்கலாம் உன்னையும்
சிரித்தபடியே

குழந்தைகளுக்கு
கொடுக்கவென தேடி அலைந்தால்
எலும்புகள்தான் கிடைத்தபடியிருக்கின்றன
எங்கும்

வந்த தடமும் கலைந்து போய்
வேண்டும் இடமும் தொலைந்து போய்
காற்றின் ஓயாத ஓலம்

தன் பறவையின் குரல் தொலைத்த காதுகளில்
ஓயாமல் விழுந்து தொலைக்கின்றன
பிணம் தின்னப் பெருமை கொள்ளும்
வல்லூறுகளின் இறகடிப்பு...

தம் தாய்மார்களைத்
தூக்கிலிட்ட கயிறுகள் கொண்டு
தூளிகட்டி தூங்க ஏங்குகிறார்கள்
எம் மக்கள்.

@@@

No comments: