Sunday, September 14, 2008
உங்களுக்காக ஒரு சிறுகதை - கண்டடைதல்
கண்டடைதல்
சுப்பிரமணியன் ரமேஷ்
இளநீல நிறத்தில் படிகம் போல தெளிந்த நீர், மர்மங்கள் ஏதுமற்று ஆழ்ந்த மோனத்தில் இருப்பதாகத்தான் இருந்தது. குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாய்ச் சிறகடித்திருந்தனர். ஒளி ஊடுருவும் கண்ணாடிச் சுவரின் மீது நீரின் விளிம்பு அவ்வப்போது பாம்பு நெளிவதான தோற்றம் கொண்டது. மேலிருந்து கதிர்களாய் கசிந்த சூரியன் அலைகளுடன் விளையாடி, ஒளியும் நிழலும் கலந்த ஜால வினோதங்களாய் பரவசப்படுத்தியது. ஒரு மலாய் குழந்தை தன்னுடைய கோதுமைக் கரங்களால் எட்டிப் பிரதிபளித்த ஒளிக் கோலத்தை தொட முயன்ற கணத்தில் கூட அடுத்த கணத்தின் உக்கிரம் தெரியவில்லை. குழந்தையின் கைகளிலிருந்து மூன்று அடி தூரம்தான்... வெறி கொண்ட கரடி எம்பிப் பாய்ந்தது...நீரைக் கிழித்தவாறு தலையைச் சிலுப்ப...திறந்த வாய், பற்களிலிருந்தும், உடலிலிருந்தும் வழிந்த எச்சில்...வெறி நாயை நினைவு படுத்தியது. சட் சட்டென நிகழ்ந்த நிகழ்வுகளின் முழு அர்த்தமும் புரியும் முன்னர் எழுந்த வேகத்தில் 'சளப்'பென நீரில் ஆழ்ந்து மறைந்து போனது. குழந்தைகள் பயத்தில் கீச்சிட்டு அலறி ஓடினார்கள். அபிநயா ஓடிவந்து ஆதித்யனின் கால்களைக் கட்டிக் கொண்டாள். ஆதித்யனும் பயத்தில் சில தப்படிகள் தன்னையறியாமல் பின்னால் போயிருப்பதை அறிந்து வெட்கம் கொண்டான்.
சற்றுமுன் விலங்கியல் பூங்காவின் அறிவிப்புப் பலகையில் படித்த விவரங்களின் தொகுப்போ, கார்ட்டூனில் பார்க்கும் 'பூ-பேரோ', அல்லது அணைத்துக் கொள்ளத் தூண்டும் 'டெடி பேரோ' அல்ல... ராட்சஷக் காட்டு மிருகம்! பனிப்புலியின் தலையைத் தன் கரங்களினாலேயே நசுக்கிச், சிதைத்து, உருக்குலைத்து அழித்துக் கொல்லும் திறன் கொண்ட விலங்கு. கண்களில் அந்நியமும், பகைமையும் தெறிக்கும் மிருகம். ஆழத்தில் நீந்தி வந்து ஆக்ரோஷமாய் எம்பியிருக்க வேண்டும். கண்ணாடிச் சுவர் தந்த அபயத்தில் அவனின் சுவாசம் மீண்டது.
• • • •
நேற்று நினைக்கக் கூட இல்லை, இன்று, இங்கே இப்படிக் கரடியைப் பார்த்தபடி பொழுது கழியுமென்று, கடந்த ஒரு வாரகாலமாய் இலக்கின்றி கழியும் பகல் பொழுதுகளும், சஞ்சலத்தின் சகல பயங்களுடனும் அலைகழிக்கும் இரவுகளும், விரல் சுடும் சிகரெட்டுகளில் எண்ணிக்கை கூடிப் போனதும், பழகிக் கொண்டிருக்கிறது என்றாலும் கூட... அலைச்சலில் அபிநயாவின் பிறந்த நாளை மறந்து போயிருந்தான், குழந்தை காலையில் ஏக்கமாய் முகத்தைப் பார்க்கையில் அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. இல்லாவிடில் இப்படியான ஒரு வார நாளின் புதன் கிழமை பகல்பொழுது, நெரிசலற்ற, பரபரப்பற்ற விட்டேத்தியான நாளாக இருந்திருக்குமா? இயந்திரத்தனமான பழக்கம் விட்டுப் போனதில் ஏதோ இனந்தெரியாத அரிப்பும், பயமும் விடாப்பிடியான குற்றவுணர்வாகி அவனின் இருப்பைத் துளைத்துக் கொண்டிருந்தது.
விலங்கியல் தோட்டத்திற்கு நுழைந்து இந்த காட்சிச் சாலைக்கு வந்ததும் கூட எதேச்சையானதுதான்... அதாவது தன்னளவில் எதேச்சையானதாகத் தோன்றுவது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் ஏதேனும் அர்த்தமிருக்கும் என்றோ, ஒரு பெரிய வரைபடத்தில் ஒரு சிறு பகுதிதான் இப்போதைய வாழ்க்கை என நம்புங்கள் என்றோ, வாழ்க்கையே நிகழ்வுகளின் ஊடான கண்டடைதல் என்றோ, யாரேனும் சொல்லியிருந்தால் இந்த நிலையிலும் அவன் சிரிக்கக் கூடும்!
நீண்ட தூரம் போகுமென நம்பிய பாதை அது. சட்டென ஒரு இடது புறத் திருப்பத்தில் முற்றாக முடிந்து போய்விட்டது. காங்க்ரீட் கூரையடைத்த காட்சிச் சாலை தென்பட்டது. அதன் முடிவில் ஒரு மேடான புல்வெளிப் பகுதி. அதற்கு அப்பால் என்னவென யூகிக்க இயலாத வண்ணம் ஒரு முற்றுப் புள்ளியாய் இருந்தது. அதித்யன் தன் வாழ்க்கையை குறியீடாகக் காட்டிடும் ஒரு முற்றுப்புள்ளி என அம் மேட்டைக் குறித்து நினைத்துக் கொண்டான்.
தார்ச்சாலைச் சரிந்து குறுகிக் கொண்டே போய் காங்கிரீட் நடைபாதையாய் முடிந்தது. வானம் இருபுறமும் வாதாம், பலா, பனை,ஆல் என காட்டு மரங்களைக் கரையாகக் கொண்டு ஒரு நீல நதிபோல ஒழுங்கற்று பரவிக் கிடந்தது. அபிநயா எந்த விதக் கவலையுமற்று பொங்கிக் ததும்பிக் கொண்டிருந்தாள். விரல்கள் மெல்ல நெகிழும் தருணத்தில் கட்டவிழ்ந்த கன்றாய் துள்ளலோடு துள்ளித் பிரிந்து ஓடி விடுகின்றாள்! மிருகக்காட்சிச் சாலைக்குள் வந்து இரண்டு மணி நேரமாகிறது. அதே துள்ளல்!
ஆதித்யனுக்கும் இத்தகைய ஒரு தனிமை தேவையாயிருக்கிறது. நீண்ட சவுக்கின் நுனியென எண்ணங்கள் சுழன்று சுழன்று மனதினை விளாறுகிறது. ரணத்தினை விடாமல் ரத்தம் கசியும்படி சொறிந்து, சொறிந்து, துன்புறுத்திக் கொண்டிருக்கிறது சுயபச்சாதாபம். ஹிம்சை. 'என்ன செய்யப் போகிறாய்? என்ன செய்யப் போகிறாய்?' என்ற கேள்வியை அடக்க வழியறியாது தவித்துக் கொண்டிருக்கும் அதித்யனை அவநம்பிக்கை மெல்ல அறுத்துக் கூறு போட்டுக் கொண்டிருக்கிறது.
அபிநயாவின் குதிப்பு இப்போது நின்றுவிட்டது, மருதோன்றிச் செடியருகே துருதுருக்கும் தேன்சிட்டினைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளின் மனசு, மெல்லிய உடலின் அசைவுகளனைத்திலும் பிரதிபளித்து சந்தோஷத்தின் அதிர்வுகளை உடல்மொழியாக வெளிப்படுத்தியபடி இருக்கிறது. தன் மகள்தான் எனினும் முற்றிலும் வேறான குண வெளிப்பாடுகள் கொண்டவளாகத் தோன்றினாள் அபிநயாஆதித்யனுக்கு. அதிலும் இப்போதைய மனோனிலையில். மகிழ்வின் இசையை சதா காட்சிப் படுத்திக் கொண்டு இருக்கும் அவளின் பருவத்திற்கு மீண்டும் போகமாட்டோமா என ஏக்கம் எழுந்தது ஆதித்யனுக்கு.
• • • •
கண்ணாடிச் சுவர் வழியே உள்ளே பார்த்தான்ஆதித்யன்.ஆழத்தில் இரு பெரிய பாறைப் படுகைகளைக் கிடத்தி இயற்கையான சூழலை ஏற்படுத்த முயன்றிருந்தார்கள். நீள் வட்டமான குளத்தில் தண்ணீர் பகுதி முடிவடையும் இடத்தில் சலவைக் கல்லாலான படிகள் இருந்தன. படிகள் மேலேறி முடியும் இடத்தில் மணல் மேடு ஒன்று பெரிய பாறைகள் இருந்த இடம் நோக்கிப் போனது. அதற்கும் அப்பால் அறை போன்ற இடம்.
‘இனுக்கா!’ எனப் பெயரிடப் பட்டிருந்த அந்த கரடி, அற்புதமான பசும்பொன்னின் சாயைகள் தென்பட பிரகாசமான வெண்ணிறம் கொண்டிருந்தது, தேவதைகளின் நிறம், கிருஸ்மஸ் தாத்தாவின் தாடி..ஆதித்யனுக்கு அந்தக் கரடியைப் பார்க்க பொறாமையாக இருந்தது! மேலிருந்து அருவி போல அந்தத் தடாகத்தில் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் நீர் படிகம் போலத் தூய்மையாக இருந்தது. குளிர்பதனப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். அபத்தமாக இருந்தாலும் தன்னை அம் மிருகத்துடன் ஒப்பிட்டுக் கொள்வதை நிறுத்த முடியவில்லை அவனால். வெம்மையின் கசகசப்பில் அவனது உள்ளாடை முழுதும் நனைந்து விட்டிருந்தது. துடைப்பதற்கான டிஸ்யூ-தாளை எடுத்துக் கொள்ள மறந்து விட்டிருந்தான். முகத்திலும், கழுத்திலும் வியர்வை வழிந்து சலிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதோடு இருண்மை கொண்ட அவனது சிந்தனைகளின் கொடுக்குகள் அவனை ஓயாது கொட்டிக் கொண்டிருக்க எரிச்சல் ஆத்திரமாகவும்,ஆத்திரம் எவர் மீதும் இலக்கு கொள்ள முடியாததால் வன்மமாகவும் அவனின் மேலேயே அனலாய்க் கவிழ்ந்து கொண்டிருந்தது. ஒரு வாரத்திற்கும் மேலாகிறது, அவனின் தடுமாற்றமும், சினமும் இன்னமும் ஓயவில்லை. கவலையாகவும், பதற்றமாகவும் உருமாறி, அவனின் எல்லா செல்களிலும் புகுந்து கொண்டிருக்கிறது. ' அடச்சே! இவற்றிலிருந்து விடுபடத்தான் விலங்கியல் பூங்காவிற்கு வந்தோம், இங்கேயும் பொம்மலாட்ட பொம்மை போல உணர்வுகளில் தத்தளிக்கிறோமே..' என நினைத்த போது நெஞ்சம் குமுறிஆண்டவனை திட்டித் தீர்த்தான்ஆதித்யன்.
• • • •
ஹோ-சிங்-ஹி. மனிதவளப் பிரிவின் தலைவர்,ஆதித்தியனின் வந்தனத்திற்குப் பதிலாக இறுக்கம் நிறைந்த புன்முறுவல் ஒன்றைத் தந்தார்! உதடுகள் பிரியாமல் நேராக விரிந்த விதம் அலுவலக சூழலில் இறுகி உறைந்தது.ஆதித்யன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சாம்பல் வண்ணச் சுவரில் அலங்காரமின்றி இருந்த வட்டச் சுவர்கடிகாரம் மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது, குளிர்பதனத்தின் ஹம்மைத் தவிர்த்து சப்தங்கள் ஏதுமில்லை. நீல நிற முழுச்சட்டையில் பொம்மை போல உறைந்திருந்த அவர் சட்டென உயிர் பெற்றார். 'உட்காருங்க' என சம்பிராதாய ஆங்கிலத்தில் உச்சரிக்கும் போதே, கைகள் உயர்ந்து ஆதித்யன் உட்கார வேண்டிய இருக்கையைக் காட்டியது. அவரது இயக்கத்தில் இருந்த செயற்கைத்தன்மை ஆதித்யனைக் கலவரப் படுத்தியது. ஹோ-சிங்-ஹி கூப்பிடுகிறார் என்றாலே கொஞ்சம் சலிப்பும் கலவரமாகவும்தான் இருந்திருக்கிறது. 'மிஸ்டர் ஆதித்யன்! உங்களோட ஆயுள் காப்பீட்டு படிவங்கள்ள தப்பிருக்கு...', 'ஆதித்யன் உங்க மருத்துவச் செலவிற்கான பில்லில் உங்களோட அடையாள எண் குறிப்பிடப் படவில்லை.' இப்படி. ஆனால் இவையெல்லாம் பெரும்பாலும் தொலைப் பேசியிலேயே முடிந்துவிடும். தேவையானவைகளை அவருடைய உதவியாளினி க்ளோரியாவிடம் சேர்ப்பித்து விட்டாலே போதும். இம்முறைதான் முக்கியமான விஷயம் குறித்து பேச, நேரில் வரும்படி அழைப்பு. மெத்தென்றிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தும் மௌனம் கலையவில்லை. சுவர்கடிகாரத்தின் வினாடி முள் ஒவ்வொரு வினாடிப் புள்ளியிலும் 'சக் சக்'கென குதித்து அதிர்ந்து, பலமுறை சுற்றி வந்து விட்டது. ஆதித்யன் மறுமுறை அவர் முகத்தைப் பார்த்த போது, ஒரு சட்டப் புத்தகத்தை வாசிக்கும் விதமாக ஆழ்ந்து தன்னை ஊடுருவி எடை போட்டுக் கொண்டிருந்ததையும், அவரது விழிகள் ஜடத்தன்மை பெற்று, ஒரு பிளாஸ்டிக் தன்மை கொண்டதாக மாறி இருந்ததையும் உணர்ந்து, ஆதித்யன் ஒருவித அமைதியின்மையை அடைந்தான். இடது கை தன்னிச்சையாக, வலது கையின் நகவிளிம்பினை சுரண்டி பிய்க்க முயன்று கொண்டிருந்தது. ஹோ-சிங்-ஹி மெல்ல அசைந்து சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். தலைக்கு மேலிருந்த குழல் விளக்கின் ஒளி அவரின் வழுக்கைத் தலைக்கு மேல் ஒரு மங்கிய ஒளிப்புள்ளியாக பிரதிபளித்து அசைந்தது. அவரது சுட்டு விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் அகப்பட்ட பேனா. காரின் வைப்பரைப் போல அரைவட்டமாக மேஜை மீதிருந்த கோப்பின் கெட்டித்தாளின் மீது அசைந்து கொண்டிருந்தது. ஆதித்யனுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன, அதற்கிடையில் இங்கே வந்து காத்துக் கொண்டிருப்பது அலுப்பாக இருந்தது. புதிதாக வந்திருக்கும் ஆட்கள் சிறுபிள்ளைகளாக இருக்கிறார்கள். வேலையிலும் கூட விளையாட்டுத் தனமாகவே இருந்தனர். தான் இல்லாவிட்டால் அடுத்த பேட்சுக்கான 'ஹைட்ரோ-க்வின்'னை கூட நிரப்ப மாட்டார்கள், லோடிங் தாமதமானால், எம்.எம்.ஏ உற்பத்தியே கூடக் குறையக் கூடும், இன்றைய டார்கெட்டையே கூட எட்டாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
"ஏதேனும் விஷயம் உண்டா? ம்...அடுத்த பேட்ச் லோட் செய்ய வேண்டியிருக்கு பணிவாக வினவினான். ஹோ-சிங்-ஹி யின் கண்களில் ஒரு விதக் கபடத் தன்மை மின்னியதாகப் பட்டது ஆதித்யனுக்கு. தொண்டையைச் செறுமிக் கொண்டார். மறுபடியும் அசைந்து உட்கார்ந்து, ஆதித்யனைப் பார்த்த போது கண்கள் கனிவாகச் சிரிப்புடன் இருந்தது. ஆதித்யனின் உள்ளம் ஆசுவாசம் கொண்டது.
"வேலையைப் பற்றி கவலைப்படாதீங்க! மத்தவங்க பார்த்துப்பாங்க. ரிலாக்ஸ்... உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?"
"ஒரு மகள்-அபிநயா"
"அப்படியா! என்ன வயது?"
"ஆறுவயது"
"காலந்தள்ளி குழந்தை பெற்றுக்கிட்டீங்களா? உங்களுக்கு இப்போ நாற்பத்தி மூணு வயதாகுமே?"
"ஆமா ஸார்! கொஞ்சம் தாமதமாத்தான் பொறந்தா!" ஆதித்யனுக்கு வெட்கமாக இருந்தது.
விரைப்பாக உட்கார்ந்திருந்த ஆதித்யன், கால்களைக் கொஞ்சம் தளர்வாக நீட்டிக் கொண்டான்.
"உங்க மனைவி எங்கே பணிபுரியறாங்க?"
"எங்கேயும் வேலை செய்யலை, அவங்களுக்கு உடல்ரீதியாக சில மருத்துவக் குறைபாடுகள் இருந்ததால் வீட்டோடுதான் இருக்காங்க. முன்னாடி கொஞ்சகாலம் எலக்ட்ரானிக் தொழிற்சாலையில் வேலை பார்த்தாங்கலா, இப்போ சும்மாதான் இருக்காங்க, என் மகளுக்கு எப்பவுமே அம்மா, கூட வேணும்! அம்மா செல்லம்!"
"முன்னாடி நீங்க ஒரு டொயோட்டா கொரல்லா காடி வைச்சிருந்தீங்க இல்லை?"
"ஆமா அதை ஸ்கிராப் பண்ணிட்டு, நிஸான் சன்னி வாங்கிட்டேன்லா!"
அதற்குப் பதிலாக திரு.ஹோ, ஏதோ சொல்ல முற்படுவதற்குள் கதவு மெல்ல இருமுறை தட்டப்பட்டு திறந்தது.
"யா! யா!- கமின் மிஸ்டர் கெல்வின் சான்! ஒய் ஸோ லேட்? மிஸ்டர் ஆதித்யனும், நானும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்." என்றார் ஹோ-சிங்-ஹி.
"மன்னிச்சிடுங்க! ஐ.எஸ்.ஓ 2000 டிட்டிங் முடிய தாமதமாயிடுச்சு." என்றபடி, ஆதித்யனுக்குப் பின்புறமிருந்து உள்ளே நுழைந்தவர் ஆதித்யனின் மேலாளர். ஆதித்யனின் பக்கம் திரும்பி, "ஹவ் ர் யூ ஆதி?" என்றபடி தூக்கி வந்திருந்த இரண்டு கோப்புகளை மேஜையின் மீது வைத்தார். ஆதித்யன் காய்ந்திருந்த உதடுகளை அவசரமாய் ஈரம் செய்து கொண்டு, அவரை இங்கே காண நேர்ந்ததின் வியப்பு அகலாமலேயே மறுமொழிந்தான்.
இருவரும் மாண்ட்ரீனில் தந்தி போல ஒற்றை வரிகளில் பேசிக் கொண்ட போது, அடிவயிறு கலங்க ஏதோ தப்பிதமெனத் தோன்றியது ஆதித்யனுக்கு. ஹோ-சிங்-ஹி ஒரு சடங்கு போல கோப்பிலிருந்து ஒரு கவரை எடுத்து ஆதித்யனிடம் நீட்டினார். 'ஏதோ மெமோ! இம்முறை கிடைக்க வேண்டிய பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்காது', என்ற நினைப்பு ஓடியதுமே, ஆதித்யனின் கைகள் மெல்ல நடுங்கவும், உடல் வியர்க்கவும் ஆரம்பித்து விட்டது. கை நடுக்கத்துடனே கடிதத்தைப் பிரித்து வாசிக்க முயன்றான். மூளை மரத்து, கண்கள் வறண்டு எரிந்து கொண்டிருக்க, முதல்வரியைப் படித்தவுடனே முற்றிலுமாக நிலை குலைந்து மேலே படிக்க இயலாமல் கண்கள் தளும்பியது. அது அவனைப் பணி நீக்கம் செய்வதாய் அறிவித்த கடிதம். கண்ணீராகவும், ஆச்சரியமாகவும், அயர்வாகவும், மௌனமொழியால் 'ஏன்?' என்ற கேள்வி தொக்கி உறைந்தது.
அவர்கள் இருவரும் எதிர்பார்த்த எதிர்வினையாய் அவனது நிலைகுலைவும் மௌனமும் இருந்திருக்க வேண்டும். கெல்வின் சான் பேச ரம்பித்தார், கடந்த பதினைந்து ஆண்டுகளாக, ஆதித்யன் எவ்வாறு அர்ப்பணிப்பு நோக்கம் கொண்ட திறமையான ஊழியராக விளங்கினான் என்பதையும், வேலையின் போது அவனுடைய ஊக்கம் எவ்வாறு மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்தது என்றும், அவனுடைய திறமை, அனுபவம், பாதுகாப்பு குறித்த சிந்தனை எப்படி இக்கட்டான தருணங்களில் உதவியிருக்கிறது, என்பதை ஒரு வருத்தம் தோய்ந்த பாவனையில் எடுத்துக் காட்டுகளுடன் கூறினார். அவனைப் போன்ற தொழிலாளியை இழப்பது, உண்மையில் இத் தொழிற்சாலைக்கு பெரிய இழப்பு என்றார். மிகையில்லாத பேச்சு, அவர் உண்மையைத்தான் கூறுவதாக ஆதித்யனுக்குப் பட்டது. அது ஒருவகையில் உண்மைதான், இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அவன் மதிக்கப் பட்டும் கொண்டாடப் பட்டும் வந்திருக்கிறான். குறிப்பாக ஒரு முறை தரமற்றதால் எம்.எம்.ஏ'வைக் கழிவாக விற்க முடிவெடுத்தது நிர்வாகம். ஆதித்யனின் யோசனையை முயன்றதில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் நஷ்டமாகாமல் தப்பியது. அதற்கு ஆயிரம் வெள்ளி பரிசும், பாராட்டுச் சான்றிதழும் கூட வழங்கினார்கள்.
கெல்வின் நிறுத்திய போது, ஒப்பனைக் கலைந்த நடிகை தன் முகத்தினை ஆடியில் பார்த்துக் கொள்ளும் போதான கணத்தை ஒத்த, ஒரு சங்கடமான மௌனம் எழுந்தது.
இம் முறை ஹோ-சிங்-ஹி சடங்கார்த்தமான இறுக்கம் நிறைந்த குரலில் பேச ஆரம்பித்தார், "உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை பொருளியல் மந்த நிலையில் ஸ்திரப் படுத்திக் கொள்ள கடந்த இரு வருடங்களாக நிர்வாகம் எவ்வளவோ போராடிக் கொண்டிருக்கிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தே வந்திருக்கிறது. மரணக்குழியிலிருந்து தப்ப இதுதான் கடைசி முயற்சி. ஆள்குறைப்பு. நீங்கள் தனி ஆள் அல்ல. இப்போதைக்கு இன்னமும் குறைந்த பட்சம் முப்பது பேர் பட்டியலில் இருக்கிறார்கள். யாருமே இதற்கு விலக்கல்ல! தேவைப்பட்டால் நான் கூட விலகித்தான் ஆகவேண்டியிருக்கும். கம்பனி இத்தகைய முடிவை எடுக்காமலிருக்க உங்களின் மேலாளரும், நானும் எவ்வளவோ முயன்றோம். குறிப்பாக உங்களைப் போன்ற சிறப்பான தொழிலாளர்களை இழந்துவிடாதிருக்க மிஸ்டர் கெல்வின் சான் பலவழிகளில் மிகவும் முயன்றார். அதில் அவர் வெற்றி பெற முடியவில்லை. வயதில் நாற்பதற்கும் மேற்பட்ட ஆட்களை எடுப்பது, என்ற கொள்கை முடிவு நிர்வாக இயக்குனரால் தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதிக சம்பளம் பெறும் நீண்ட நாள் ஊழியர்களை வேலையிலிருந்து எடுப்பதன் மூலம், ஓரளவிற்குத் தப்பி விட முடியும் என கம்பனி கருதுகிறது."
சிறிது இடைவெளி விட்டு குரலைச் சற்று உயர்த்தி இதுவரை பேசியதன் சாரம் போல் ஹோ பேச ஆரம்பித்தார்:
" ஆதித்யன் உங்களின் வேலை இழப்பிற்கு காரணம் தகுதியின்மையோ, பணியில் நீங்கள் செய்த தவறுகளோ அல்ல, இது உங்களுக்கு ஆசுவாசம் அளிக்கும் என நம்புகிறேன். கடிதத்தில் குறிப்பிட்டபடி இழப்பு ஓய்வூத்தியங்களைத் தராளமாய்த் தர கம்பனி முன் வந்திருக்கிறது. நிர்வாகத்திற்கு உங்களின் குறைகளைத் தெரிவிக்கவோ, சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவோ உங்களுக்கு நான்கு வார அவகாசம் தரப்பட்டுள்ளது. சியர் அப் ஆதி, உங்களைப் போன்ற சின்சியரான ஆளுக்குப் பிரகாசமான எதிர்காலம் எப்பவுமே உண்டு. குட் லக் டு யூ!"
ஒரு கை குலுக்கலில் முற்றிலுமாக முறிந்து போய் விட்டது அவரது பதினைந்து வருட உறவு. வெளியேறி, தடுமாறி நின்ற ஆதித்யனை, "தானாக காரோட்டிக் கொண்டு போக இயலுமா? ஏதேனும் உதவி தேவையா?" என்று கெல்வின் கேட்டார். ஆதித்யன் மறுத்து வெளியேறும் முன்னர், எச்.க்யூ லோட் செய்யாமல் வந்துவிட்டது நினைவுக்கு வந்தது. அதை மேலாளரிடம் கூறவும் செய்தான்.
• • • •
துருவக் கரடி ஒருவித வன்மத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் அரக்க உடல் விசையுடன் நீரைக் கிழிக்க இயந்திரத்தனமாய் வலிமையுடன் அதன் முடிவற்ற பயணம் அந்த பெரிய தொட்டியில். சலவைக் கல்லாலான படிகட்டிலிருந்து பெருத்த அலையெழும்ப முங்கி, ஆழ நீந்தி கற்படுகைகளை அடையும், அதில் சரிவான பாறையின் முதுகினில் கால் தட்டுப்படும் வரையான நீச்சல், பாறை மீதான நடையாக மாறுகையில் மூக்கு, நீரின் மேலே தெரிய நீரின் கோட்டைக் கலைத்துக் கொண்டு தலை வெளிவரும், மெல்ல அது நடந்து சலவைக் கல்லை அடைகையில் அதன் இடுப்பு வரை வெளியே வந்திருக்கும். சிந்தனையற்ற இத் தொடர் நாடகம் மறுபடி மறுபடி நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வட்டமும் முடிவடைகையில் புதிய தொரு வட்டம் அதனினும் வேகமும், வலிமையும் கொள்வதாய் பட்டது ஆதித்யனுக்கு...
• • • •
அபிநயா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதற்குள் அவளுக்கு ஒரு சினேகிதி கிடைத்து விட்டாள் என்பது, இரண்டு குட்டிகளும் அவ்வப்போது கரடியைக் குறித்து வியந்து கொள்வதும், சிரித்துக்கொள்வதிலிருந்தும் தெரிந்தது. இரண்டு முறை கூப்பிட்டும் அவள் அந்த இடத்தை விட்டு நகரும் வழியாய்த் தெரியவில்லை. காற்று மொடமொடப்பாய் விட்டு விட்டு வீசியது. வெள்ளெலிக் குஞ்சின் சருமத்துடன் ஒரு வெள்ளைக்கார பெண் ஆதித்யனிடம் வந்தாள், அவள் கையில் பாதி திறந்தபடி ஒரு கோக் கேன் இருந்தது. நட்புடன் கச்சிதமாகச் சிரித்தாள். அழகான சிரிப்பும், நீலநிறக்கண்களும், துள்ளியமான பற்களும் அவளைப் பேரழகியாய் காட்டியதை உணர்ந்தான் ஆதித்யன். இவள் என் ஓவியத்தில் இடம் பெறத் தக்கவள் என்று நினைத்தான். "நீங்களும் கரடிக்கு இறையிடுவதைக் காணக் காத்திருக்கிறீர்களா?" என்றாள். விவரப்பலகையில் பிற்பகலுக்கானச் சிறப்பு நிகழ்ச்சியாக 'இறை போடுவதை' குறித்திருந்தார்கள் என்பது நினைவுக்கு வந்தது. தான் சாப்பிடுவதை மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் தனக்கு மிகவும் கூச்சமாக இருக்கும், என்று அவனுக்கு தோன்றியது. அந்தக் கரடிக்கு இத்தகைய கூச்சங்கள் உண்டா என்பது தெரியவில்லை. அபிநயாவிற்குப் புது அனுபவமாக இருக்கும் என்று அவனுக்குப் பட்டது. 'ம்' என்று தலையசைத்தான். "அது சிறப்பான நிகழ்ச்சி" என்று விவரப்பலகையில் படித்திருந்ததாகக் கூறினான். "பிற்பகல் 1.05க்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க வேண்டும், இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பித்துவிடும் என நினைக்கிறேன்." என்றான்.
"ஆமாம் சிங்கப்பூரர்கள் காலம் தவறாதவர்கள்" என்று அந்தப் பெண் கூறினாள்.
அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஆதித்யனும் மோதித்தான். அந்தப் பெண்ணிடம் விடைபெற்று, அரங்கம் போல ரசிப்பதற்கு வசதியாய் போட்டிருந்த வினைல் நாற்காலிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டான். அபிநயாவும் வியர்வையில் நனைந்த முகத்துடன் அருகே வந்து அமர்ந்து கொண்டாள். ஆதித்யனுக்கு தன்னியல்பாய் தொடர்ந்து எழும் துர்-எண்ணங்களிலிருந்து தப்பிப்பது பெரும் பாடாக இருந்தது. வெளி விஷயங்களில் சிதறிய கவனம் மாறியதுமே ஒரு வலை போல, அவை மறுபடியும் மறுபடியும் அவன் மீது கவிழ்ந்துக் கொள்கிறது. அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அவன் இடையறாது வெளிப்புறமாக புலன்களின் அசைவுகளில் மனதை வைத்து அலைந்து கொண்டிருக்கிறான். சதா புகைப்பதும் அயர்ந்து களைத்து விழும் வரை படுக்கையின் பக்கம் செல்லாமல் இருப்பதுவும். தனித்து மனைவியிடம் பேசுவதைத் தவிர்க்க, காலையிலேயே கிளம்பி எங்கேனும் ஓடிப்போவதுமே இப்போதைக்கு அவனுக்குத் தெரிந்த வழியாக இருக்கிறது. பிரச்சனைகளைத் தீர்க்க யோசிக்கிறேன் என்று ஆரம்பிக்கும் அவனுடைய சிந்தனை எல்லா பயங்களையும் கற்பித்துக் கொண்டு நம்பிக்கையை ஊனப்படுத்தும் ஒரு பாவனை என்பது சமீபத்தில்தான் பிடிபட்டது. என்ன செய்யலாம்? ஏதாவது செய்தே தீரவேண்டும். இப்போதைக்கு செலவுகளை குறைக்கவேண்டும். காரை உடனடியாக விற்பதற்கு மனோகரனைப் பார்க்க வேண்டும். இப்போது விற்பதால் கட்டாயம் $10,000 வெள்ளியாவது நஷ்டம் வரத்தான் செய்யும்... மெல்ல ஒரு விதமான ஏக்கம் போல ஏதோ ஒன்று அவனைக் கவ்வும். இந்தக் காரை வாங்குவதற்கு முன்னர் நிறைய ஷோரூம்களில் போய்ப் பார்த்திருக்கிறான். தொட்டுப் பார்ப்பான், காரின் பானட்டை மெல்லத் தடவிக் கொடுப்பான். அது எதோ நாய் பொலவும், இவனது அன்பின் காரணமாய் நன்றி பொங்க அதுவே வீட்டுக்கு ஓடி வந்து விடும், என்று நம்புவதைப் போல வாஞ்சையாய் இருக்கும். விற்பனைப் பெண்கள் குட்டை உடையில் நளினமாய் சிரித்துப் பேச ஆரம்பிக்க, அது எதுவுமே அவனைத் தொடமுடியாத வசீகரிப்பின் மயக்கத்தில், காரின் முன்புற இருக்கையில் அமர்ந்து பார்ப்பான், ஸ்டீரிங்கை மெல்ல திருப்பிப் பார்ப்பான். காரின் கதவை மூடி, தன் ஆசையையும் கொஞ்ச நாளைக்கு அடைத்து வைப்பான். இந்தக் காரினை வாங்கிய காலத்தில் மிகவும் உற்சாகமாய் இருந்தான்! நண்பர்களுக்கு விருந்து, கோலாலம்பூருக்கு அடிக்கடி குடும்பத்துடன் பயணம் என. காரில் பார்த்துப் பார்த்து, புதுப்பித்த விஷயங்களுக்கான செலவை மீட்க இயலாது. காரில்லாமல் இருப்பதைக் குறித்து அவனால் யோசிக்க இயலவில்லை. 'உலகப் போரில் ஜப்பான்காரன் வந்ததில் சொத்து முழுதும் இழந்து ரப்பர் தோட்டங்களில் திரிந்து அப்பா செத்ததைப் போல, கடைசீ காலத்தில் அல்லல்பட்டுத்தான் அலைய வேணுமோ?' என அதித்யனின் யோசனை திசை மாறும் கணத்தில், அவனின் பயங்கள் புற்றீசல்கள் போல வெளிக் கிளம்பி ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும். ஷிப்யார்ட் விபத்தில் கண்கள் போன பின்னர், கோபாலன் நாயர் வீட்டை இழந்து, மனைவியும் விவாகரத்து பெற்று போன பின், தனியாய் ஓரறை வீட்டில் முடங்கிப் போனது நினைவுக்கு வரும். உதற உதற அந்த நினைப்பு வலிமை பெறும். தன் மேலேயே சலிப்பு வரும். உருப்படியாக இடையே வேறு கூடுதல் படிப்புகளையும் படித்திருக்கலாம், வேறு விதமான வேலைகளுக்கேனும் முயற்சி செய்திருக்கலாம், என எண்ணமிடுவான். பாழாய்ப் போன ஓவியம் வரைவது மட்டுமே அவனுக்குத் தெரிந்த வேறு விஷயம். 'சைத்ரீகம் தரித்திரம்'ன்னு படியேறி வந்த உறவுக்காரர் அவன் வரைந்து வைத்திருந்த ஓவியங்களைப் பார்த்துக் கூறியது நினைவுக்கு வந்தது ஆதித்யனுக்கு. மோட்கிளியானி, வான்கோ, சவ்டின்...முக்கால்வாசி ஓவியர்களின் வாழ்க்கை அப்படித்தான் முடிந்து போயிருப்பது கசப்புடன் நினைவுக்கு வந்தது.
• • • •
திடீரென கரடியின் இயக்கம் ஓயாத அலைச்சலாய்ப் பட்டது ஆதித்யனுக்கு. இந்தப் பாழாய்ப் போன கரடி ஏன் இப்படி ஓயாமல் அலையனும்? வேளா வேலைக்குச் சாப்பிட்டு தண்ணியிலேயே நிம்மதியாய் வீழ்ந்து கிடக்கலாமில்லை? எதுக்காக இப்படி எதையோ தொலைச்சதைப் போல அலையனும்? ஆனந்தமாய் மணல் திட்டில் புரண்டு கிடக்கலாம். நிழலில் மத்தியான தூக்கமொன்றைப் போடலாம்.
வேலை முடிந்து, அயர்ந்து களைத்து வருகையில், 'தினமும் வேலைக்குப் போய்த் தொலைக்கனுமே'ன்னு இருக்கும் ஆதித்யனுக்கு. அப்போதெல்லாம் 'சேர்ந்தார்ப் போல விடுப்பு கிடைக்காதா' என ஏங்குவான். கிடைத்தால் அமைதியான ஏதேனும் ஒரு மூலைக்குப் போய் படம் வரையலாமென மனம் ஏங்கும். இப்போது அந்த உணர்வு அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவசரமாய் தவிர்க்க விரும்பி மறுபடி கரடியைக் குறித்து யோசிக்க ஆரம்பித்தான்! இந்தத் தவிப்பு எதற்காக? கரடியை ஓயாமல் விரட்டுவது எது? தாய் தந்தையரைக் குறித்த நினைவுகளா? இழந்து போன காடு பற்றிய ஏக்கமா? சூழல் தப்பி வாழ நேர்ந்த அவலமா? தப்பிக்க வழியற்று பொறிக்குள் சிக்கிய விலங்காய்த் தோன்றியது, கரடி இப்போது. 'எது பொறி?' என்பதுதான் பிடிபடாத மாயம்! மறுபடியும் துருவக் கரடி கண்ணாடியின் குறுக்காக ஆழத்தில் நீந்தி இயந்திரத்தனமாய் படுகைகளின் மேலேறுவதைக் கூர்ந்துப் பார்த்தான். இப்போதும் பார்க்க க்ரோஷமாகத்தான் தெரிந்தது, அதே சமயத்தில் யோசிக்கப் பாவமாய்ப் பட்டது ஆதித்யனுக்கு.
• • • •
பொடிக்கலரில் வட்டக் கழுத்தமைந்த டி-சர்ட்டும், அதன் மீது கரும் சாம்பலில் கையில்லாத மேலணியும் அணிந்திருந்த இந்திய வம்சாவளி இளைஞன், ஏற்ற இறக்கங்களுடன் இனுக்காவின் உயரம், எடை, உணவுப் பழக்கங்கள் என ஒயரற்ற மைக்கில் விளக்கிக் கொண்டிருந்தான். வட்ட வடிவத்தில் அமைந்த இரு பேட்சுகள் மேலணியுடன் இணைக்கப் பட்டிருந்தது. மேலணியிலிருந்த ஏராளமான பைகளிலில் அவன் விரல்கள் தன்னிச்சையாக உள் நுழைவதும் வெளிவருவதுமாக இருந்தது.
பின்புலத்தில் கரடியின் ஆர்பாட்டம் அதிகரித்து, பரபரப்படைந்தது. அது நீந்துவதை நிறுத்தி, தண்ணீரின் மீது தலையை வலுடன் தூக்கி இயன்ற போதெல்லாம் கைகளை உயர்த்தியது. கூரையில் யாரோ நின்று கொண்டிருக்க வேண்டும். ஆதித்யன் அவர்களைப் பார்க்க முயன்றான். முடியவில்லை. நேர்மேலாக நின்று கொண்டிருக்க வேண்டும். பின்னர் பதைப்பும், பரிதாபமும் தொனிக்க அவசரமாய் கரையேறி, திட்டுபோல இருந்த இடத்திற்கு ஓடி ஏறியது. தலை அவர்கள் நின்றிருந்த திசையை விட்டகலவே இல்லை. மேலிருந்து மீன் துண்டங்கள் விழுந்தன. கரடி இப்போது ஒரு கழைக்கூத்தாடியின் பரிதாப நிலையை அடைந்தது. கோமாளி போல இரு கால்களில் நின்று கைகளால் சலாம் அடித்தது. வாய் திறந்து முன்புறம் நீண்டிருந்த இரு கோரைப் பற்கள் தெரிய, மூக்கும் கரிய இரு உதடுகளும், பரபரப்பாய் சுருங்கிக் கொண்டிருந்தன. தடையற்று ஜொள் வழிந்து கொண்டிருந்தது. இனுக்கா, அதன் கூரிய மோப்ப சக்தியை இப்படி விரயம் செய்து கொண்டிருந்தது. கூட்டம், கரடி இப்படி சாப்பாட்டுக்கு அலையும் செய்கையைப் பார்த்து வியந்தது. எட்டடி உயர கிருதியான மிருகம் இப்படி மீன் துணுக்குகளுக்காக கூனிக் குறுகிக் கொண்டிருந்தது.
முற்றிலும் எதிர்பாராமல் நிகழ்ந்த, இந்த செய்கையை ''ஆவென வாய்ப் பிளந்து, பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யன், அதிர்ச்சியும், மலைப்பும் அடைந்தான். கரடியைப் பார்ப்பதைத் தவிர்க்க திரும்பிய விழிகளில், விவரப்பலகை மறுபடியும் பட்டது, உண்மையில் வெண்ணிறம் அக்கரடியின் வெளித் தோற்றமே, முடிகளற்ற கரடி கருப்பான தோல் கொண்டதென போட்டிருந்தது! அவமானமும், வெட்கமும் தனக்கு ஏன் ஏற்பட்டதென அவனுக்குப் புரியவில்லை. கூட்டம் காட்சி முடிந்து போய் விட்டது. அற்ப ஜந்து கீழே இறைந்து கிடந்த துணுக்குகளை இன்னமும் முகர்ந்து முகர்ந்து தன்னுடைய நீலமும், ஊதாவும் கலந்த நீண்ட நாக்கால் நக்கிக் கொண்டிருந்தது. அதன் செய்கை தோரணை எல்லாம் ஒரு நாயைப் போலிருந்தது. அதன் வலிவும், திறனும், வேகமும், அலைகழிப்பும் உணவுக்கான கூழைக் கும்பிடா? நாற்றமெடுத்து அழுகிக் கிடக்கும் மீன் துண்டு அதன் வாழ்வை அலைகழித்து குறுக்குவதா? ஆழத்தில் ஏதோ ஒரு சங்கிலி உடைந்தது போல அவனது மார்புக் கூடு விரிந்து, விம்மி, காடுகளைத் தழுவி வந்த புத்திளம் காற்றை அள்ளி நுகர்ந்தது.
இனி எப்போதைக்குமே அங்கே பார்க்க ஏதுமில்லை என்று பட, அபிநயாவை அழைத்துக் கொண்டு போக எழுந்தான். கால்கள் தன்னியல்பாக மேட்டை நோக்கி நடை போட்டது. 'அங்கே பாதை கிடையாது'ன்னு எதிர்பட்ட யாரோ சொன்னாங்க. 'தனியா பாதையில்லேன்னா போறதெல்லாமே வழிதான்!' என ஆதித்யன் நினைத்துக் கொண்டான். மேட்டில் ஏறுகையில் அபிநயாவின் துள்ளல் ஆதித்யனிடமும் சேர்ந்து கொண்டது.
• • • •
பின்குறிப்பு: சிங்கப்பூரர்களின் செல்லமான 'இனுக்கா' சமீபத்தில் உயிரியல் பூங்காவில் இறந்துவிட்டதென கேள்விப்பட்டேன்.
Sunday, October 15, 2006
புகைப்படம்-2
Saturday, May 27, 2006
மதுமிதாவின் பட்டியலில் ஒரு திருஷ்டி
வலைப்பூ பெயர் : 'கூவத்தில் நிலவு', 'வாசகர் வட்டம்'
சுட்டி(url) : http://subramesh.blogspot.com
http://vasagarvattam.blogspot.com
ஊர்: சொந்த ஊர்: வேலூர், வாய வந்த ஊர்: சிங்கை
நாடு: சிங்கப்பூர்
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: 'மரத்தடி' தோஸ்துங்கதான், கெட்டப் பயக்கங்க அல்லாத்தியும் அவங்கத்தான் சொல்லிப் பூட்டாங்க ! ர்ர்ர்ரொம்ம்ம்பக் கெட்டப் பஸங்க!
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :01/05/2005
இது எத்தனையாவது பதிவு: எய்தினதை சொல்றீங்களா, எய்திக் கிழிச்சதயா?
இப்பதிவின் சுட்டி(url): http://subramesh.blogspot.com/2006/05/blog-post_27.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: 'பூ', பூத்துகினு காய் வருங்கோ, க்காய் காய்ச்ச்சிகினு பழமாயி அப்பாலிக்கா ந்நெற்ற்ய வெதங்களைத் தர்றும்ன்னு ஒரு பாயாப் போன நெனப்புலத்தானுங்கோ.
சந்தித்த அனுபவங்கள்: அனுபவமா? அப்ப்டின்னா யென்னா கண்ணூ?
பெற்ற நண்பர்கள்: உலகம்பூரா முச்சூடும் கீறாங்க யென்னான்னு சொல்லிக்கிறது? அக்காங்!
கற்றவை: புச்சு புச்சா யென்னான்னவோ புள்ளிங்க செய்யுதுங்க, சொல்லிக்கிணுகீதுங்க, நா யென்னாத்தைக் கண்டுக்கினேன்.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: படா சோக்குதான் மாமே, பக்கா சரக்கே விட படா கிக்குதான்...ஆனா நாம யென்னா பாலிடிக்ஸு பேசிக்கினுகீறவனா, அண்ணாத்தீங்கள்ளாம் படா சோக்கான விசியங்களைப் பேசிக்கினு கீறாங்களா நமுக்கு வாயெத்தொறந்தாலே பயமாகீது.
இனி செய்ய நினைப்பவை: இப்ப செய்ஞ்சினுகீறதேதான், டக்கர்ர்ரா பிளேடு போட்ட்றவனை, 'வாத்யாரே நீ பெர்ய வித்தக்காரன்யான்னு சொல்றது.' அப்பப்ப நம்ம வலிப்பையும் வலிச்சிக் காட்றது. புச்சா புள்ளிங்க வந்து சாலாக்கா நின்னா , அய்ய இத கய்தே கூச்சப் படாதே, வந்து தொய்லக் கத்துக்கண்ணு ஓயாம கூவிக்கினுகீறது. அய்ய இத்த, வேறா யென்ணா தெரியும் என்க்கு?
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: எதுக்க்கு இது எல்லாம், ரொம்ம தமாசாகீது, என்க்கு கூச்சிமாக்கீது, பெரிய தொர்ற்றமாருங்க மண்டியப் போட்டப் பின்னாடி டீ.வி'லத்தான் இப்டிக் கேட்டிகிணு கிடப்பாங்க.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வற்ட்டுமா, டாஸ்மார்க் தீந்துப் போயிடுச்சி, ஷ்ட்டரை வல்சிட்டானா, ராவுக்கு பேஜாராப் பூடும்.
.
காலத்தின் வேறொரு புள்ளியில் மீண்டும்

நண்பர்களே! நானும் வலைப் பதிக்க வந்தேன்னுதான் பேரு...
@ ஒரு இடத்தில பிரசுரமானதை இன்னுரு இடத்தில போடக்கூடாது (இந்த 'ஈ-போஸ்ட்டர்' ஒட்டற வேலையெல்லாம் நமக்கு ஆகாது), மேம்போக்கான விஷயங்களை எழுதறதை விட, தமிழ் தொலைக்காட்சித் தொடரின் 1542வது எபிஸோடுல மானாவரியா பிலாக்கானம் வைக்கிறதை பார்த்துத் தொலைக்கலாம், யாரோட தற்கொலைக்கு கூட்டுக் கலவி காரணம்ன்னு கிசுகிசு எழுதறதுக்கு பதிலா நம்மோட கண்ராவி பாடதிட்டதில எம்.ஏ தமிழையே படிச்சித் தொலைக்கலாம்...அப்படி இப்படின்னு ஏகப்பட்ட உதார் விட்டதில இரண்டு மூனு பதிவுக்கு பின்னர் வலைமனை இந்தியக் கோர்ட்களில் நிலுவையிலிருக்கும் சிவில் வழக்குகள் போல கிடப்பில் கிடக்க நேர்ந்து விட்டது.
சமீபத்தில எடுத்த என் மகள் சஞ்சனாவின் புகைப்படத்துடன் மறுபடியும் பிரவேசித்திருக்கிறேன். (என்ன பிரவேசமோ?! உனக்குதான் வெளிச்சம்ன்னு சொல்லறது காதில விழுது.)
மறு மொழியுங்கள் நண்பர்களே...
Sunday, March 05, 2006
Monday, May 16, 2005
தீபம் பத்திரிக்கையில் நா. பா எழுத்தாளர்களிடம் "நானும் என் எழுத்தும என்ற தலைப்பில் கட்டுரைகள் கேட்டு வாங்கிப் போட்டு பிரசுரம் செய்தார், எழுத்தாளர்கள் ஏன் எழுதுகிறார்கள், அவர்களின் அக, புற நோக்கங்கள் என்ன போன்ற அரிய தகவல்கள் கொண்ட கட்டுரைகளாக அவை மலர்ந்தன. ஜாம்பவான்கள் பலர் எழுதிய அக் கட்டுரைகளை 'தீபம் கட்டுரைகள்' என்ற பெயரில் பல ண்டுகளுக்கு முன்னர் கலைஞன் பதிப்பகம் தொகுத்து உள்ளது.
நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ரா.சு நல்லபெருமாள், தவன், வல்லிக்கண்ணன், இந்திரா பார்த்தசாரதி, எம்.டி. வாசுதேவன் நாயர் உட்பட பலர் எழுதியுள்ளனர். வளரும் எழுத்தாளர்களும்,உளரும் எழுத்தாளர்களும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்!
நகுலனின் இக்கட்டுரை முதலில் படித்தபோது என்னைக் கவரவில்லை, சுந்தர ராமசாமியின் கட்டுரை அப்போது ரொம்பப் பிடித்திருந்தது, இப்போது நகுலனின் கட்டுரை யோசிக்கத் தூண்டுகிறது. உள்ளுணர்வு சார்ந்த எழுத்துக்களை அறிவுஜீவிக்கதைகளுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு யோசிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. உலகத்தில் அறிவு ஏற்படுத்திய குழப்பத்திற்கும், வன்முறைக்கும், போர்களுக்கும் வேறு ஒரு மாற்று அவசியம்.
இக் கட்டுரையில் நகுலன் கருத்துக்கள் எல்லாவற்றிற்கும் நான் உடன்படுகிறேன் என நினைத்து விடக்கூடாது. உதாரணத்திற்கு பிரசவவலி , சிரித்து சிரித்து வயிறு புண்ணாய்ப் போயிற்று. நானும் 'சிருஷ்டியின் பிரசவ வலியில் போய் படுக்கையில் படுத்துக் கொண்டேன்! பாய்ஸ் பட ஜனகன மெட்டில் நான் பிரசவித்தது பின் வரும் பாட்டுதான்
"ஜனகனமன ஜமக்காளம் விரி...படுத்துப் புரளு கபகபகப கும்பிக்குக் கொட்டு கடமுட கட...கக்"..சரி பொகட்டும் விடுங்கள் நகுலனும் அருள் குமரனும் பிரசவிப்பதைக் கவனித்துக் கொள்ளட்டும்.
மற்றொரு உதாரணம்: ராஜா ராவ் சொன்னதை நகுலன் மேற் கோள் காட்டி விட்டு மறுபடியும் பழைய குருடி என வாலரி சொன்னார் அது இது எனப் பேசப் போய்விடுகிறார், அப்படியானால் ராஜாராவிடமிருந்து இவர் என்ன கற்றுக் கொண்டார்?
கலைஞன் பதிப்பிற்கு நன்றியுடன் இக் கட்டுரையை இடுகிறேன், வாசித்துப் பாருங்கள்.
வேளை வந்துற்ற போதுநகுலன்
இந்தக் கட்டுரை ஒரு சுய நிர்ணயமாக, சுய பரிசோதனையாக முடிந்து விடக் கூடும் என்று இந்த முதல் வாக்கியத்திலேயே எனக்குத் தோன்றுகிறது. முதலாவதாக 'ஏன் எழுதுகிறேன்?' என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அதற்குரிய பதில் என்னால் எழுதாமல் இருக்க முடியாமல் இருப்பதால், எழுதுகிறேன்' என்று பதில் அளித்து விட்டு நகர்ந்து விடுகிறேன். காரியம்தான் காரணம், னால், இந்த மாதிரிக் கட்டுரைகளில் இரண்டாம் பக்ஷமான காரணத்தை முதலில் கூறுவது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி, இப்படி இதைப் பார்க்கையில், நண்பர் சுந்தரராமசாமி வேறொரு சந்தர்ப்பத்தில் வேறொரு விஷயத்தைப் பற்றிக் கூறிய மாதிரி, இக்காரணம் அவரவர் மனவார்ப்பைக் காட்டுகிறது. என்னைப் பற்றியவரை, சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார் என்பது தெரியாது என்பதனால், என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எது என்று கண்டுபிடிக்க, எழுத்தை நாடுகிறேன்; ஏனென்றால் அது என் வழி. னால் என்னை நான் தெரிந்து கொள்ள ஏதாவது ஒரு பிரதிபலிப்புதான் பயன்படுகிறது; அந்தப் பிரதிபலிப்பு, பிரதிபலிப்பு என்பதினாலேயே, என் நிதர்சனக் காட்சியைத் தருவதில்லை; னால் எழுத்தில் இந்த ஐயமும் நிழலாடுவதால்தான் மற்ற பிரதிபலிப்புகளை விட இந்தப் பிரதிபலிப்பு ஓரளவு எனக்கு ஒரு நிதானத்தை அளிக்கிறது.
இது அடுத்த கேள்வி, என் அனுபவத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்ல முயற்சிக்கிறேன். கொஞ்ச வருஷங்களாக எங்கும் இடங் கிடைக்காத எழுத்தாளனாக இருந்த நிலை மாறி, புகுந்த இடமும் சில காரணங்களால் புளித்து விட்ட நிலை வந்ததும், ஏன் எழுதுகிறேன் என்பதைத் தெரிவித்திருந்த நான், இப்பொழுது எப்படி எழுதுகிறேன் என்பதையும் அறிந்து கொண்டிருக்கிறேன். என் நண்பர் உளநூலில் ஈடுபாடு மிக்க டாக்டர் மோகன் மேத்யூ கூறியபடி, ஒவ்வொரு சிருஷ்டிக் கலைஞனும் ஒரு பிரசவ வேதனையை அனுபவிக்கிறான்; முக்கியமாக ண் வர்க்கத்தைச் சேர்ந்தவனுக்கு இது பெண் வர்க்கத்துடன் கூறும் ஒரு அறைகூவலாகவே அமைந்துவிடுகிறது! பெண் வர்க்கத்தில் இருப்பவர்கள் சிருஷ்டிக் கலையில் ஈடுபடுவது அவர்களுக்கு இயற்கையாக வரும் சிருஷ்டி அனுபவம் அதிருப்தி தருவதாக இருக்கலாம் என்று கூறும் வாக்கு எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. னால் ஒன்று; குறிப்பிட்ட கட்டங்களில் என் உள்ளத்தில் ஒரு கட்டுக்கடங்காத பரபரப்பு ஏற்படுகிறது. சமயம் எப்படியும் இருக்கலாம். அதிகாலை, நடுநிசி, பகல்வேளை, மாலை. இந்தப் பரபரப்பைக் கழித்துத் தீர்க்க நான் எழுத ரம்பிக்கிறேன். எழுதுகையில் சிறுகதை, சிறு கவிதையாக இருந்தால் ஒரே இருப்பில் இருந்து எழுதி விடுவது என் வழக்கம். இந்தக் கட்டங்களில்கூட சிருஷ்டி வேதனையின் அதிதீவிரத் துடிப்பைத் தீர்க்க நடுநடுவே கட்டிலில் சென்று நான் படுத்துக் கொள்வதும் உண்டு! பல சிரியர்கள் கூறியபடி, இந்த முதல் கட்டத்தில் என்னால் என் படைப்பை விமர்சகனாக மாறி நின்று பார்க்க முடிவதில்லை. நான் செய்ததைச் சீர்திருத்தச் சில சமயங்களில் ஒரு கால இடையீடு வேண்டியிருக்கிறது. ங்கிலக் கவிஞன் கூறிய சிருஷ்டி விஷயத்தில் அனுபவத்திற்கும் அதைக் கலையாக மாற்றும் கட்டத்திற்கும் ஏற்படும் கால இடையீடு இயற்கையாக அமைவது; இது செயற்கையாக நான் அமைத்துக் கொள்வது. அடுத்தபடியாகக் கதைக்கு கரு எவ்வாறு அமைகிறது என்ற கேள்வி. ராமசாமி எழுதிய மாதிரி அனுபவம் வெறும் கண்ணாடிச் சில்; எழுதுபவனின் திறமைதான் அதற்கு ரஸப் பூச்சுப் பாய்ச்சுகிறது. நான் எழுதத் தேர்ந்தெடுக்கும் அனுபவமும் என் மன வார்ப்பைக் காட்டுகிறது. இந்த அனுபவத் துணுக்கு அடி மனதிலிருந்து சிருஷ்டிப் பரபரப்பில் வெடித்துக் கொண்டு வருகிறது. இதற்கு ஒரு பூரணத்துவத்தைக் கொடுப்பது எழுதுபவனின் படிப்பு, மனோ விலாசம், அனுபவம் மேலும் பலவற்றினால் உருவாக்கப்பட்ட அடி மனதின் செழிப்புத்தான். இங்கு ஒரு உதாரணம் கொடுக்கலாமே என்று தோன்றுகிறது. நான் ஒரு நண்பருடன் வெகு நாட்களாகப் பழகி வந்தேன். ஒரு நாள் முதல் முறையாக அவர் வீட்டுக்குப் போனபோது அது பிரம்மாண்டமான ஒரு கட்டிடமாக இருந்தும், அதில் மூவர் மாத்திரம் குடியிருந்தது, எனக்கு அதில் ஒரு வெறுமை உணர்ச்சி வியாபித்திருந்தாக ஒரு பிரம்மை; என்னவோ அப்போது 'காகப்கா'வின் இலக்கியம் ஞாபகம் வந்தது. அடுத்த தடவை அந்த நண்பர் என்னை மாடியில் சந்திக்காமல் கீழே உட்கார வைத்துப் பேசியதும், ஒரு பெண் மாடி ஏறிச் சென்றதும் என் மனத்தைக் கவ்விப் பிடித்தது. அதிலிருந்து உருவானது 'சாதனை' என்ற கதை. சிருஷ்டி வெறியில் எழுதுகையில் மனத்தை ஒரு நிலையில் நாட்டி, வெளியிலிருந்து வரும் தாக்குதல்களை ஒரு வகையில் புறந்தள்ள லாகிரிப் பொருள்கள் உதவுகின்றன. எழுதிய பிறகு நாம் எழுதியதற்கு இரண்டாவது அபிப்பிராயம் வேண்டுமா என்றால், அனுபவம் வாய்ந்த கலைஞனுக்கு அவன் அபிப்பிராயம்தான் முக்கியம் என்பது என் கட்சி. னால், நமது சூழ்நிலையில் கலைஞனும் மனிதன் என்ற பலவீனத்தால் இந் நிலையைக் காக்க ஓரளவு கஷ்டப்படுகிறான்.
நான் தமிழ் நாட்டில் முதல் வரிசையில் நிற்கும் சில சிரியர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பை அடைந்திருக்கிறேன். இவர்களில் பலரும் இலக்கிய விஷயமாக அதிகமாகப் பேச முன் வராதது எனக்கு ஓரளவு ச்சரியத்தை அளித்தது. என்றாலும், நான் சந்தித்த சிலரிடமிருந்து இலக்கிய விஷயமாக நான் சில்லறை சில்லறையாகக்( இது அவர்களுக்குத் தெரியுமோ என்பது எனக்குத் தெரியாது) கடன் வாங்கியிருக்கிறேன். ஸ்ரீ க.நா.சு., சி.சு.செ., 'மௌனி', சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி இவர்களைத் தவிர ஸ்ரீ ராஜாராவ் அவர்களையும் குறிப்பிடலாம். க.நா.சு. விடமிருந்து தெரிந்து கொண்ட நமது ஐதீகத்திற்கும், பண்பாட்டிற்கும், இலக்கியத்துக்கும் தத்துவார்த்தமாக இருக்கும் உறவைப் பற்றி இன்னமும் சர்ச்சை செய்து கொண்டிருக்கிறேன். அவர் வற்புறுத்தும் கனமான உலக இலக்கியப் படைப்புகளுடன் வேண்டிய உறவின் அவசியத்தைப் பற்றியும் நினைத்ததுண்டு; சி. சு. செ. கலைஞனுக்குள்ள மூர்த்தண்யத்தைப் பற்றிச் சில விஷயங்களை அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்திருக்கிறார். சுந்தர ராமசாமி தனது சுய நிர்ணயத்தால் பல இலக்கிய தரமான விஷயங்களைச் சர்ச்சை செய்யும் ற்றலைக்கண்டு நான் பலமுறை வியந்ததுண்டு. நம்பி, 'நான் எதை எப்படி எழுதினாலும் எழுதுவதனைத்தும் என் மூலம் வந்து நானாகத்தானே விரிகிறது.' என்று சொன்னது இதை எழுதுகையில் ஞாபகம் வருகிறது. 'மௌனி' ஒரு குறிப்பிட்ட தத்துவ அடிப்படையில் அனுபவம் முழுவதையும் கூர்மையாகவும் நுணுக்கமாகவும் சர்ச்சை செய்வதைக் கண்டிருக்கிறேன். இவரும் க. நா. சு. போல் ஐரோப்பிய சிருஷ்டிக் கலைஞர்களின் சற்றுக் கனமான நூல்களுடன் நல்ல பரிச்சியம் உடையவர் என்று தோன்றியது. 'அவர் சொல்வதோ, நான் சொல்வதோ முக்கியமன்று. நீ உன் வழி செல்' என்று, ராஜா ராவ் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார்.
பாதிப்புகளைப் பற்றியவரை நான் ங்கில மொழிபெயர்ப்பில் டால்ஸ்டாய், டாஸ்டாவெஸ்கி, இப்ஸென், பிராண்டெல்லோ, ப்ரூஸ்ட் என்பவர்களையும் ங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், ஹென்றி ஜேம்ஸ், ஜாய்ஸ், எலியட், டன், பெக்கட் முதலியவர்களைப் படித்திருக்கிறேன். அமெரிக்க சிரியர்களில் பாக்னரையும், கவிகளில் மரியம் மூர், வாலஸ் ஸ்டீவன்ஸ் என்னைக் கவர்ந்திருகிறார்கள். ப்ராய்டிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. இந்தப் பெயர்கள் உடனடியாக ஞாபகம் வருபவை. நவீன இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவன் தலால் நிறையப் படிப்பதுண்டு. னால், இவர்களின் சாயல் என் எழுத்தில் வரக் கூடாது என்றும் எனக்குண்டு. நமது இலக்கியத்தில் பாரதம் (இன்னமும் முழுதும் படிக்கவில்லை படிக்க வேண்டும்) கைவல்ய நவநீதம், திருமந்திரம், உபநிஷத்துகள், கீதை இவை என் மனதைத் தொட்டிருக்கின்றன. என்னைப் பற்றியவரை, வார்த்தைகளின் அழுத்தத்திலும், நுணுக்கத்திலும் கிரியா சக்தியாக இயங்குவதிலும் தமிழ் கவிதையின் உச்ச கட்டம் குறளில்தான் அடைந்திருகிறது என்று தோன்றுகிறது. எனக்கு கம்பன்கூட இரண்டாம் பக்ஷம்தான். நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கியமாகக் குறிப்பிடக் கூடியவர்கள் 'மௌனி', 'புதுமைப்பித்தன்', க. நா. சு. கியவர்கள்தான். இதைத் தவிர எனக்கு மலையாள இலக்கியத்திலும் சிறிது பழக்கம் உண்டு. எனக்கு இலக்கியத்தில் ஒரு நிதான நிலையின் அவசியத்தை உணர்த்தியவர் மதிப்பிற்குரிய நண்பர் ஸ்ரீ கே. அய்யப்பப் பணிக்கர் என்பதையும் குறிப்பிட வேண்டும். முடிவாக என் எழுத்துக்கெல்லாம் முக்கிய பாதிப்பாக சுசீலாவைக் காண்கிறேன்.
சுமார் 10 வருஷங்களில் 3 நாவல், 20 கவிதைகள், ஏறக்குறைய 20 கதைகள் எழுதியிருக்கிறேன். கவிதையைப் பற்றி ஓரிருவர் 'ஓ, இன்னாரா, மாம்; கவிதை எழுதுகிறார்' என்று சொல்லி நிறுத்திக் கொள்வதைக் கண்டேன். மற்றபடிக் கதைகளைப் பற்றியோ பிரசுரமான ஒரு நாவலைப் பற்றியோ வாசக வட்டாரங்களில்-விஷயமறிந்த-அறியாத இருவகை வர்க்கங்களிலும் ஒருவித சலனமும் ஏற்படவில்லை என்பதையும் கண்டேன். இந்தக் கட்டத்தில் ங்கில சிரியை 'விர்ஜீனியா உல்ப்' ஐ பற்றிக் குறிப்பிட வேண்டியிருகிறது. அவள் தனது 'தற்கால நாவல் இலக்கியம்' என்ற பிரசித்தமான கட்டுரையில் ஒவ்வொரு இலக்கிய சிரியனும் மொழிக்கு பிடிகொடுக்காத வாழ்வின் புதிரை தெளிவு படுத்தத்தான் எழுதுகிறான் என்றும், சம்பவங்களைக் கோவைபடுத்துவதிலும், பாத்திரங்களை உத்திபூர்வமாக வனைவதிலும் இவ்வுண்மை பொய்ப்பிக்கப்படுகிறது என்றும், இலக்கியத்தில் கதாம்சத்தின் கலப்பில்லாமல், இந்த உண்மையைச் சித்தரிப்பதில்தான் அவன் நாட்டம் என்று எழுதியிருக்கிறாள்.
எடுத்துக்காட்டாக ருஷ்ய சிரியர்களைக் காண்பிக்கிறாள். ஈ. எம். பாஸ்டர் கூடத் துரதிர்ஷ்டவசமாக கதையில் கதாம்சம் வேண்டியிருக்கிறதே என்று கூறுகிறார். ஜாய்ஸ், பாக்னர், ஜேம்ஸ் இவர்களின் கதைகளில் கதாம்சம் எப்படி அமைந்திருக்கிறது? பெக்கட்டை எந்த சராசரித் தமிழ் வாசகன் அறிந்து அனுபவிக்க முடியும்? இவ்வளவு தூரம் ஏன் எசுதுகிறேன் என்றால் கதையில் கதாம்சம் அவ்வளவு முக்கியமில்லை என்பதற்கே!
எனது 20 கதைகளில் குறைந்தது 10 எனக்கு ஓரளவு சுமாராகப் படுகின்றன. அவற்றில் ஒன்று 'சுதேசமித்ரன்' வாரப்பதிப்பிலும், மற்றவை 'சரஸ்வதி', 'இலக்கியவட்டம்', 'எழுத்து' இவற்றிலும் வெளிவந்தவை. இவைகளைப் பற்றி ஒருமுகமான அபிப்பிராயம், தெளிவில்லை, ஓட்டமில்லை, சிறுகதையில்லை, கதையின் கருவேயன்றி கதையல்ல என்பவையே. என்னால் ஸ்தூல உருவைப் பளிச்சென்று படம் பிடிக்க முடிவதில்லை. மேலும் உருவம் வேண்டும் என்றாலும் இப்படித்தான் உருவம் அமைய வேண்டும் என்ற நிர்பந்தத்தை நான் ஒத்துக் கொள்வதில்லை. மிகைப்படுத்தி எழுதுவதைவிட, சூசகமாக எழுதுவதில்தான் எனக்கு நம்பிக்கை. மேலும் பத்திரிக்கை கதைகளை என்னால் படிக்க முடிவதில்லை. ஏனென்றால் கலைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு அவசியம்; னால் கலை அப்பட்டமான வாழ்க்கைப் படமும் இல்லை. னால் பத்திரிக்கைக் கதைகள் செல்லரித்துப் போன நீதிகளை, ரீதிகளை இன்னமும் ட்சி செலுத்துவதாகப் 'பொய்' யாக ஏற்றுக் கொண்டு நடைபெறுவதால், நடைமுறைக்கு நேர் விரோதமாக இவைகள் காணப்படுகின்றன. காலத்தில் கட்டுண்டுதான்-காலத்தை மீறி ஒரு இலக்கிய சிருஷ்டி நிற்கிறது. னால், இவ்வளவும் சொல்வதால் என் கதைகள் முற்றும் வெற்றி பெற்றவையாகவும் நான் கருதவில்லை. என்னை யார் என்று தெரிந்து கொள்ளும் ஒரு முயற்சியில், என் அனுபவ உலகை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியாகவே நான் கதைகளைக் கருதுகிறேன். என் கதைகள் ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் வரவில்லை. பிறகு இலக்கியப் பத்திரிகைகளிலும் வெளியிடுவது சாத்தியமாகிவிட்டது. பிறகு அண்மையில் ஒரு நாள் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கையில் 'அழகி' முன்னுரையில் க. நா. சு புஸ்தகத்தில், புஸ்தகமாக வரவென்றே சில கதைகளை எழுதியதாக எழுதியது ஞாபகம் வரவே, பத்திரிகைகளைப் படையெடுப்பதைவிட, இலக்கியப் பத்திரிகையாசிரிகளின் தத்துப் பிள்ளைகளில் ஒருவனாகவோ, சிஷ்ய கணங்களில் ஒருவனாகவொ சேர்வதைவிட, சில நல்ல சிறு கதாசிரியர்கள் சொன்ன மாதிரி என் கதைகளை அவர்கள் எழுதுவதையோ (இந்தக் கதையை நான் எழுதுவதென்றால் இன்னமும் நன்றாக எழுதியிருபேன்) நான் விரும்புவதில்லையாதலால், ஒரு நோட் புக்கில் என் கலை ஈடுபாட்டை, எனக்குள்ள கலைத் திறனை சோதனை செய்ய, வேறு யாருக்குமின்றி, எனக்காகவே ஒரு சில சிறுகதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது அவசியமா என்று கேட்டால், இன்று தமிழ் இலக்கிய உலகம் இருக்கும் நிலையில் இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. இவைகளைத் திரட்டிப் பார்க்கையில் எழுத்தாளன் கற்பனை எவ்வாறு ஒரு குப்பை கூடை என்பதும், இந்தக் குப்பைக் கூளத்தில்தான் எவ்வாறு ஒன்றிரண்டு தானியங்கள் மிஞ்சுகின்றன என்பதையும் சொல்லவேண்டும். இதுகாறும் எழுதிய கதைகளில் 'சாதனை', 'ஒரு பெண்', 'ஜிம்மி', '?', 'ஒரு கதை', 'அசவத்தமென்னும் ஒரு மரம்', 'யாத்திரை', 'ஈசுவரய்யரும் சங்கரராமின் காரியதரிசியும்', 'அகம்', என்பவைதான் சற்று மனதிற்கு ஒரு தெம்பைத் தருகின்றன. இவற்றில் பலவும் பத்திரிகைகளில் வராதவை; புஸ்தகமாகவும் வர வாய்ப்பில்லாதவை! எனவே என்னைப் போன்ற எழுத்தாளருக்கு நான் கூறக்கூடியது பத்திரிகைகளையோ, இலக்கியக் குழுக்களையோ சாராமல் தன் நிர்ப்பந்தத்தினால் தனக்காகவே அவன் எழுதிக் கொள்ளப் பழக வேண்டும் என்பதே. இப்படி எழுதுவதால் அவன் கலையில் தெம்பும் வலிவும் காணும்; அதிக பக்ஷமாக நல்ல கதைகளும் பிறக்கும். பிறகு பிரசுரம் இருக்கவே இருக்கிறது. னால், இது முடியுமா? அவ்வளவு எளிதன்று என்பதுதான் உண்மையான பதில்!
எனது பிரசுரமான 'நிழல்கள்' ஒரு குறுநாவல். பக்கங்கள் குறைந்திருப்பதால் குறுநாவல் என்றுதானே கூற வேண்டும். இந்த நாவலும் என் கொள்கைப்படி என்னை அறிவதற்கு, என் உலகைப் பரிசீலனை செய்யும் ஒரு முயற்சி. இதைப் பற்றி நான் அபிப்பிராயம் கேட்காமலே ஒரு இலக்கிய மேதை "இதில் பாத்திர சிருஷ்டி மோசம்; நீ தத்துவம் பேசுவதாக நினைத்துக் கொண்டு என்னவோ எழுதியிருக்கிறாய்" என்றார். இன்னொருவர் " வழுக்கிக் கொண்டு போகிறது." என்றார். ஒரு ங்கிலப் பேராசிரியர் "வாழ்க்கையின் கசப்பான பிரத்தியட்சம் தெரிகிறது; என்றாலும் கலாபூர்வமாக இல்லை. நீ என்னதான் எழுதினாலும் ஜனரஞ்சகமான சிரியனாக முடியாது. உன் சை என்னவானாலும் ஜேன் ஸ்டினை மாடலாக வைத்துக் கொண்டு எழுது" என்றார். இதற்கெல்லாம் என் கவிதை ஒன்றில் எழுதியபடி "பேசினார்கள்; பேசாமல் கேட்டேன்" என்றுதான் சொல்ல வேண்டும். னால், நான் மதிக்கும் ஒரு சிருஷ்டி கர்த்தா "இந்த நாவல் நன்றாக இருக்கிறது; அடுத்த நாவலை எழுதுங்கள்" என்றார். இதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவன் மாதிரி அடுத்த நாவலை எழுதி முடித்தேன். நான், தற்காலத்தில் நாவல் புற உலகைப் புறக்கணித்து அக உலகை அறிவதில்தான் ஈடுபட்டிருக்கிறது என நினைக்கிறேன். னால் அதே சமயத்தில் நாவல் தனி மனிதனை சமூக உறுப்பினனாகச் சித்தரிக்கவும் கட்டுப்பாடுடையது. இந்த அக-புற உலக இணைப்பு சரியாக அமைந்திருப்பதால்தான் நான் க. நா. சு. வை தமிழிலேயே சிறந்த நாவலாசிரியர் என நினைக்கிறேன். மற்றபடி என் 'நிழல்களை'ப் பற்றி எனக்கு நேரில் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. 'நிழல்கள்' புஸ்தகமாக வந்துவிட்டது என்பதும், அதைப் பற்றிக் குறிப்பிட்ட இவ்விமர்சனங்கள் இன்னாரால் இவ்வாறு வந்தன என்பதும் என்னைப் பற்றியவரை மிக உபயோகமான விஷயங்கள். மற்றபடி, நாவலுக்கு இன்னொரு நோட் புக்!
கவிதைதான் இலக்கியத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பொழுது கவிதையில் படிமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பறைசாற்றுகிறார்கள். னால், படிமம் கூட மனநிலையின் சூக்கும உருவாக, சிந்தாகதியின் பிரதிரூப பிம்பமாகச் செயல்படுவதில்தான் சிறக்கிறது. கவிதையில் இசையின் தொடர்பு வேண்டுமென்றாலும் அது மிகைப்படுவதால் மலினமடைகிறது. அதனால்தான் பழங்கவிதையைப் பின்பற்றுவதாகக் கற்பனை செறிவு இல்லாத யாப்புக் கவிதைகள் ஓசைக் குப்பைகளாக இருக்கின்றன. என் போன்ற சிலரின் அனுபவம் யாப்புக் கவிதையில் காணப்படும் ஓசை அமைதி பிடிபடுவதில்லை என்பது மட்டுமல்லாமல், சுயேச்சா கவிதையிலும் ஒரு ஓசை ஒழுங்கு காணப்படுகிறது என்பதுமாகும்! ஒரு தமிழறிஞர் பாசுரங்கள் யாப்புக் கடங்காதவை என்கிறார். இது உண்மையா என்பது எனக்குத் தெரியாது!
கவிதையைப் பற்றி எழுதுகையில் எனக்கு வாலரி கூறியது ஞாபகம் வருகிறது: வசனத்தில் வார்த்தை ஓர் உத்தேசத்துடன் உபயோகப்படுவதால், அவ்வுத்தேசம் கழிந்தவுடன் அது அழிகிறது என்றும், கவிதையில்தான் அக்ஷரங்கள் அமரத் தன்மைப் பெறுகின்றன என்றும் கூறுகிறார். இது இவ்வாறு அன்று என நிருபிக்க முடியும் (வசனத்தைப் பற்றி) என்று டி. எஸ். எலியட் கூறுகிறார். மேலும் வாலரி கவிதையில் பாஷை வசனத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு இயங்குகிறது என்றும், இதை எடுத்துக் காட்டுவது உபயோகமாக இருக்குமென்கிறார். இக் கருத்து புதுக் கவிதைக்காரர்களுக்குப் பயன்படலாம்.
என் கவிதைகளில் சுசீலா என்ற சங்கேதச் சொல் மூலம் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தைக் கொண்டு பல அனுபவங்களை நான் அளக்க முயற்ச்சிக்கும் கவிதைகள் 'கொல்லிப்பாவை' வரிசை. 'காட்சி' அனுபவச் சிதறல்களைச் கலை வண்ணமாக்கும் முயற்சி. நான் கவிதை உட்செவியில் எப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கையைச் சார்ந்தவன். என் கவிதைகளை இன்னமும் சோதனா பூர்வமாகச் செய்து பார்க்க வேண்டுமென்ற சை எனக்கு.
இதுகாறும் நான் எழுதியவற்றிலிருந்து எனது எழுத்தாள நண்பர்கள் தோல்வி மனப்பான்மை உறக்கூடாது என்பதையும் கூற வேண்டும். நான் எழுத்துலகில் புகுவதற்கு ஒரு கட்டத்தில் ஒரு சில சிரியர்கள் எனக்கு உதவினார்கள்; அடுத்த கட்டத்தில் வேறு எழுத்தாளர்கள். இதை நினைவில் வைத்துக் கொண்டுதான் ஒரு கவிதையில் எழுதினேன்.
"வேளை வந்துற்றபோது நாதன் வடிவில் நாலிருவர் வந்து போவார்"னால், ஒரு எழுத்தாளனுக்குத் தன் நிலை அறாமலிருப்பதுதான் முக்கியம் என்பதையே நான் வற்புறுத்துகிறேன். தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள், இலக்கியத் தரம் வாய்ந்தவை அல்லாதவை, புஸ்தக ஸ்தாபனங்கள் எல்லாமே பெயரெடுத்த சிரியர்களைத்தான் அங்கீகரிக்கின்றன. ஒருவெளை இது இப்படித் தான் இருக்க முடியும். னால், இந்தக் கட்டத்தை அடையும் வரை ஒரு எழுத்தாளன் சற்றுக் கஷ்டப்பட வேண்டியதுதான்! இந்தக் கட்டத்தை அடைந்த பிறகும் அவன் தன் சுயத்தன்மையை விட்டுக் கொடுக்காமலிருந்தால் அவன் சாதனை தரத்திலும் வளத்திலும் சிறப்புறும். எது என்னவானாலும் நண்பர் நீல பத்மனாபன் பாஷையில் ஒரு எழுத்தாளன் வாழ்வே "ஏகாந்த யக்ஞத்தின் சீதள ஒளியில்தான் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது" என்று சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொள்கிறேன்.
Monday, May 02, 2005
மேலும் சில கவிதைகள்
'தேநீருக்கு சர்க்கரை போதுமா?
பால் சேர்ப்பீர்களா?
எவ்வகை தேயிலை உங்களுக்கு உகந்தது?'
மொழிகளின் கண்ணிகளில் சிக்கிக் கொண்டு நான்...
கருணை வழியும் உன் தண்-விழிகள்
மௌனமாய் என்னுள் அரும்புகளை முகிழ்க்கிறது
மனதின் இரைச்சல்களை இசையாக்கும்
தருணம் வாய்க்கையில்
தேநீர் கூட என் அன்பை சமர்ப்பிக்கும் உனக்குள்.
@
கால் மாற்றி
கால் மாற்றி நின்று
பார்த்துக் கொண்டேயிருந்தேன்
மத்தாப்புகளின் நினைவுகளோடு
வெல்டிங்கை
பார்க்காமல் இழந்திருந்தேன் நான்...
பார்த்துப் பார்த்தே இழந்திருந்தான் அவன்!
@